வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (12:23 IST)

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: மெத்தனால் குடித்ததும் உடலுக்குள் என்ன நடக்கும்?

Kalla Sarayam
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அடுத்தடுத்து பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளன. மெத்தனால் கலந்த சாராயம் எந்த அளவுக்கு அபாயகரமானது? உயிருக்கு ஆபத்தான, தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மெத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளில் எப்படி சேர்கிறது?



தமிழ்நாட்டில் விஷ சாராய உயிரிழப்புகள் ஒன்றும் புதிதல்ல. குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் வீட்டிலேயே முடங்கியிருக்க நேரிட்ட போது, சிலர் போதைக்காக தின்னர் போன்ற பலவற்றையும் போதை வஸ்துகளாக பயன்படுத்திய செய்திகள் வந்திருக்கின்றன. போதைக்காக விபரீத வழிகளை முயற்சித்த சிலர் ஆங்காங்கே உயிரிழந்த செய்தியும் நம்மை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள் நேரிட்ட தருணங்களில் எல்லாம், மெத்தனால் உயிரைப் பறிக்கக் கூடியது என்று அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அதன் ஆபத்தை அனைவரும் உணரச் செய்ய பலவிதங்களிலும் முயற்சித்தே வந்துள்ளன.

ஆனாலும், அதையெல்லாம் மீறி குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் விஷ சாராயம் 20-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது. கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கூட சிலர் அதனை நாடுவது ஏன்? மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம்.

மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?

"கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.

அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.

அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார்.

Kalla Charayam


மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும்.

அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார்.

சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் கிடைப்பது எப்படி?

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மெத்தனாலை தனி மனிதர்களின் கைகளில் கிடைக்கவிடாமல் செய்ய ஏற்கனவே பல கடுமையான விதிகள் அமலில் உள்ளன. தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே மெத்தனால் பயனாகும் என்பதால், அதனை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளன. தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளும் விதிகளும் இருக்கவே செய்கின்றன. இவை அத்தனையையும் மீறி கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளுக்கு மெத்தனால் கிடைப்பது எப்படி? என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி பதில் தந்தார்.

"பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அதேபோல், கள்ளச்சாராய வியாபாரிகள் விவரத்தை தொழிற்சாலை உரிமையாளர்களும் அறிந்திருப்பார்கள். அவர்களிடம் மெத்தனாலை விற்பதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதே காரணம். இந்த சட்டவிரோத கூட்டுதான், உயிரைப் பறிக்கும் மெத்தனால் கள்ளச்சாராயம் வழியாக மனித உடலுக்குள் நுழைய வழியமைக்கிறது.

மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மெத்தனாலை வாங்க வேண்டுமென்றால் அதற்கான உரிமம் வைத்திருப்பது அவசியம். அது போக, வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு இருப்பு இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை தொழிற்சாலைகள் பதிவு செய்து பராமரிப்பது கட்டாயம். இத்தனை கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மீறியே பணம் சம்பாதிக்கும் ஆசையில் மெத்தனாலை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

கடந்த ஆண்டில் மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான மெத்தனால் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சப்ளை செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Kallakurichi

கள்ளச்சாராயம் விற்றதாக 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் மெத்தனால்தான் காரணம் என்பதை நேற்றைய தினம் அரசு வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

10 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
  • மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா,
  • திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி
  • கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன்
  • காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ்
Edit by Prasanth.K