செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (14:13 IST)

'வலிமை' அஜித் மீது உருவக் கேலியா? பதில் கொடுத்த மேலாளர் - நடந்தது என்ன?

என் ரசிகர்கள், என்னை வெறுப்பவர்கள், நடுநிலையாக இருந்து விமர்சனம் தருபவர்கள் என அனைவரையும் நான் ஏற்று கொள்கிறேன் என நடிகர் அஜித்தின் அறிக்கையை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது மறுபகிர்வு செய்துள்ளார். என்ன நடந்தது?

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடிகர் அஜித் திரையுலகிற்கு வந்து 30 வருடங்களை நிறைவு செய்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

திரையுலகில் 30 வருடங்களை கடந்ததற்காக நடிகர் அஜித் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி என தொடங்கிய அந்த அறிக்கையில், 'ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலைவாதிகள் என இவர்கள் மூவரும் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள்.

ரசிகர்களின் அன்பு, வெறுப்பவர்கள், நடுநிலை விமர்சனங்களை தருபவர்கள் என இவர்கள் அனைவரையும் நான் ஏற்று கொள்கிறேன். வாழு! வாழ விடு!! நிபந்தனையற்ற அன்பு எப்பொழுதும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்பொழுது அந்த அறிக்கையை சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபகிர்வு செய்து, 'யாருக்கெல்லாம் இது தற்போது தேவைப்படுமோ அவர்களுக்காக இதை மறுபகிர்வு செய்கிறேன். எப்பொழுதும் நிபந்தனையற்ற அன்பு- அஜித்குமார்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன?

கடந்த மாதம், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், பிரபல யூடியூப் விமர்சகரான 'ப்ளூ சட்டை' மாறன் இந்த படத்திற்கு தன்னுடைய யூடியூப் பக்கத்தில் விமர்சனம் வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் அஜித்தின் உருவம் தொடர்பாக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அஜித் ரசிகர்களிடையே ஆட்சேபத்தை உருவாக்கியது.

இதனை அடுத்து, சமீபத்தில் நடந்த வெவ்வேறு திரைப்பட நிகழ்வுகளில் கலந்து கொண்ட நடிகர்கள் ஆரி மற்றும் ஆர்.கே. சுரேஷ் இதனை கண்டிக்கும் விதமாக பேசியிருக்கிறார்கள். இதில் நடிகர் ஆரி, பலரது கூட்டு உழைப்பில் உருவாகி இருக்கும் சினிமாவை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை மாறன் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் தனது உழைப்பின் மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் நடிகர் அஜித்தை தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் விழாவில் பேசியிருந்தார்.

இதனையடுத்து ப்ளூ சட்டை மாறனும் இவர்களுக்கு பதிலடி தரும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த இரு தரப்பு பேச்சுகளும் ரசிகர்களிடையே மீண்டும் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இப்பொழுது இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.