1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (20:53 IST)

சிம்பு, விஷால் உள்ளிட்ட 5 நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் 'ரெட் கார்டு' அறிவித்தது உண்மையா?

முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மற்றும் அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு அளித்ததாக தகவல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அத்தகவல் உண்மை இல்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி விளக்கமளித்துள்ளார்.
 
நடிகர் விஜய்யின் இலக்கு 2026 தேர்தலா? அவர் செல்வது எம்.ஜி.ஆர் பாதையா, ரஜினிகாந்த் பாதையா?
 
நேற்று (ஜூன் 18) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அதில், தயாரிப்பளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் முறையாக பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
 
முன்னனி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, மற்றும் அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக ரெட் கார்டு வழங்கியது எனச் செய்திகள் வெளியாகின.
 
இந்நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் முன் தொகை பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என்றும், நடிக்க வரவில்லை என்றும் தயாரிப்பாளர்கள் புகார் அடிப்படையில் ரெட் கார்ட் வழங்கப்படுகிறது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
 
தயாரிப்பாளர் சங்கம் சொல்வது என்ன?
 
நடிகர் சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
 
நடிகர்கள் சிம்பு, விஷால், எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா உள்ளிட்டவர்களுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டதா என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்தார்.
 
கடந்த சில ஆண்டுகளாக ஒத்துழைப்பு தராத நடிகர்கள் சம்பந்தப்பட்ட புகார்களை முறையாக ஆராய்ந்து, தயாரிப்பாளர்களிடம் சுமூகமாகச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களை திரைப்படங்களில் நடிக்க வைக்க மாட்டோம், என்று தான் பொதுக்குழுவில் பேசப்பட்டது என்றார்.
 
“இது குறித்து நடிகர் சங்கத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, மற்றும் அதர்வா என எந்த நடிகர்களின் பெயர்களையும் நாங்கள் குறிப்பிடவில்லை,” என்றும் கூறினார்.
 
 
24 துறைகளைச் சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களை நிர்வகிப்பதும், ஒருங்கிணைப்பதும் தயாரிப்பாளர்கள் தான், என்று கூறுகிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி
 
தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசிய அவர், "ஒரு திரைப்படத்தை உருவாக்க 24 துறைகளைச் சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் தங்கள் கூட்டு உழைப்பை கொட்டிக் கொடுக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நிர்வகிப்பதும், ஒருங்கிணைப்பதும் தயாரிப்பாளர்கள் தான்."
 
“தயாரிப்பாளர்களுக்கு அவர்களது திரைப்படம் வெற்றி பெற்றால் மட்டுமே வாழ்க்கை. தயாரிப்பாளர்களின் முதலீட்டால் நூறுக்கணக்கான குடும்பங்கள் வாழும் ஆனால் அவரது வாழ்க்கையையோ, குடும்பத்தையோ நஷ்டம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை,” என்றார்.
 
‘ரெட் கார்டு’ என்றால் என்ன?
 
சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் திரைப்படத்தினை முடித்துக் கொடுக்க வேண்டும். அதாவது, கால்ஷீட் கொடுத்தபடி படப்பிடிப்பில் முறையாக கலந்து கொள்வது, படப்பிடிப்பு தளத்தில் சக தொழில் நுட்ப கலைஞர்களுடன் இணைந்து செயல்படுவது என முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்துவிடும். அதன்படி, தயாரிப்பாளர்கள் யாரும் அவர்களை திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.
 
 
‘உழைப்பாளி’ திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு கொடுக்காததால் தயாரிப்பாளர் சங்கம் ரஜினிகாந்துக்கு ரெட் கார்டு வழங்கியது.
 
தமிழ் சினிமா வரலாற்றில், தயாரிப்பாளர் சங்கம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்துக்கு 1993ஆம் ஆண்டு ‘உழைப்பாளி’ திரைப்படத்தின்போது ரெட் கார்ட் வழங்கியது.
 
ரஜினிகாந்த் ‘உழைப்பாளி’ திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு கொடுக்காமல், நேரடியாக திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்தார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கம் இனி ரஜினிகாந்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் எனக் கூறி ரெட் கார்டு வழங்கியது. இப்பிரச்னையை, ரஜினி பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமாக முடித்தார். தயாரிப்பாளர் சங்கமும் அவர் மீதிருந்த ரெட் கார்டை நீக்கியது.