திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (23:55 IST)

ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த விமான ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்த சர்வதேச கும்பல் - திடுக்கிடும் தகவல்கள்

மலேசியாவை சேர்ந்த விமானிகளும், விமான பணியாளர்களும் ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தியதாகவும், இதற்காக கணிசமான தொகையை 'சன்மானம்' ஆக பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

'பிரிஸ்பேன் டைம்ஸ்' என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் 'மலேசியன் ஏர்லைன்ஸ்' மற்றும் 'மலின்டோ ஏர்' விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமான சிப்பந்திகளை ஆஸ்திரேலியாவில் இயங்கி வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் கும்பல் ஒரு பெண்ணின் தலைமையில் செயல்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் இருந்தபடி கடத்தல் வலைப்பின்னல் அமைத்துச் செயல்பட்ட அந்தப் பெண்மணியின் பெயர் மிஷெல் என்காக் டிரான்.

விமானிகளும் விமானப் பணியாளர்களும் கடத்தி வரும் ஒவ்வொரு கிலோ ஹெராயினுக்கு 1.55 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை விலையாகக் கொடுத்துள்ளார்.

மறுபக்கம் அதே ஹெராயினுக்குக் கூடுதலாக 40 ஆயிரம் ஆஸ்திரேலிய டாரலர்களைக் கட்டணமாக வைத்து உள்ளூர் சந்தையில் விற்றுள்ளார். இடைத்தரகர்கள் மற்றும் கூரியர் செலவுகளுக்கு இந்த லாபத்திலிருந்து பணம் கொடுத்துள்ளார்.

49 வயதான டிரான், போதைப்பொருள் வட்டாரங்களில் 'ரிச்மான்ட் அரசி' என்று குறிப்பிடப்படுவார் என்றும், கடந்த 2018 அக்டோபரில் தொடங்கி ஜனவரி 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 8 கிலோ எடையுள்ள போதைப்பொருளை அவர் ஆஸ்திரேலியாவுக்குள் கடத்தி வரச் செய்தார் என்றும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலிய அரசுத் தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரிஸ்பேன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடத்தல்

பிடிபட்ட பெண் ஊழியரால் அம்பலமான உண்மைகள்

கடந்த ஆண்டு துவக்கத்தில் மலேசிய பெண் விமானப் பணியாளர் ஒருவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயன்று மெல்பெர்ன் விமான நிலையத்தில் சிக்கினார். அதன் பிறகு நடைபெற்ற விசாரணையின்போதே விமானப் பணியாளர்களை கடத்தல் கும்பல் தங்களுடைய ஊழியர்களைப் போல் பயிற்சியளித்து, சன்மானம் கொடுத்து மிஷெல் டிரான் உத்தரவுப்படி போதை பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது அண்மைய ஆண்டுகளில் வழக்கமான நிகழ்வாகவே மாறிவிட்டது. போதைப்பொருள் கடத்தலுக்கு மலேசியாவில் அதிகபட்சமாக தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆயுள்சிறைதான் அதிகபட்சம். ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டின் துவக்கத்திலும் கூட மலேசிய விமானப் பணியாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கைதானார். தற்போது அந்த ஆடவர் மூன்றரை வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஆனால் அவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து அதிக விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. மேலும் வெறும் 500 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மட்டுமே 3.5 கிலோ ஹெராயினைக் கடத்த ஒப்புக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தவிர தாம் ஹெராயின் கடத்துவதை அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே தான் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிப்பதாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.