செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (22:22 IST)

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு சர்வதேச தடை - பின்னணி என்ன?

Srilanka
இலங்கை கால்பந்தாட்ட ஆண்கள் அணி, முக்கிய இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இதனை அறிவித்துள்ளது.
 
2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதிக்குட்பட்ட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றுக்கு பங்குபெறுவதற்கு முடியாத வகையில் இலங்கை அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
?
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி தடை விதித்திருந்தது.
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாத்மா சமுராவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடாக 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சட்டத்திற்கு அமைய, 16வது சரத்தின் பிரகாரம் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சட்டத்தின் 13வது சரத்திற்கு அமைய, மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமை ரத்து செய்யப்படுவதாகவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
இதனால், தடை நீக்கப்படும் வரை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கழக அணிகளுக்கும், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதன்பிரகாரம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திலுள்ள உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அல்லது ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் போட்டிகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பாடநெறிகள் அல்லது பயிற்சிகளுக்கான நன்மைகள் கிடைக்காது.
 
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய செயற்படாமை, கொள்கை செயன்முறைக்கு எதிராக முன்னாள் தலைவரது வேட்பு மனுவை இறுதி நொடியில் நிராகரித்தமை, நிராகரிக்கப்பட்ட உப தலைவர்கள் இருவரின் வேட்பு மனுக்களுக்கு பதிலாக போட்டியின்றி இருவர் தெரிவு செய்யப்பட்டமை, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் மூன்றாவது தரப்பு தலையீடு செய்தமை மற்றும் அந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் குழாமை, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்றுக்கொள்ளமை போன்ற காரணங்களினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் நடந்தது என்ன?
 
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலின் ஊடாக, புதிய தலைவராக ஜே.ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஜகத் ரோஹண ஆகியோர் போட்டியிட்டனர்.
 
இந்த தேர்தலுக்காக வருகை தந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமருக்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போனது.
 
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஜே.ஸ்ரீரங்காவிற்கு 27 வாக்குகள் கிடைத்த நிலையில், அவர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த சம்மேளனத்தின் புதிய செயலாளராக டி.எச்.எஸ்.இந்திக்க தெரிவு செய்யப்பட்டார்.
 
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்ட தடை காரணமாக, இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு நன்மைகள் கிடைக்காது போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டு நிதியுதவிகள் மாத்திரமன்றி, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பமும் இல்லாது போயுள்ளன.
 
ஆண்டொன்றிற்கு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி இல்லாது போகின்றன.
 
இந்த தடை காரணமாக, இலங்கை தேசிய அணிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இல்லாது போகின்றன.
 
ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக பங்குபற்றும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதி பெற்ற இலங்கை நடுவர்களுக்கு (12 நடுவர்கள்) அதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகின்றது. இந்த தடை நீக்கப்படும் வரை அவர்களுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச கழக போட்டிகளில் ஈடுபடும் இலங்கை வீரர்களுக்கு மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடும் ஏனைய 210 நாடுகளுடனான தொடர்புகள் இல்லாது போயுள்ளன.
 
தேசிய அணிக்கு கத்தாரினால் வழங்கப்பட்ட சர்வதேச கால்பந்தாட்ட பயிற்சியாளர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
தேசிய அணிக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான சர்வதேச பயிற்சிகளும் இல்லாது போயுள்ளன.
 
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்கிக் கொள்ள இலங்கை முழுமையாக சில விடயங்களை செய்ய வேண்டியுள்ளது.
 
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளது மேற்பார்வையில் கொழும்பில் நடத்தப்பட்ட தேர்தலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
 
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலை, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன ஏற்றுக்கொள்ளாமையினால், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இதற்கு முன்னர் இருந்த அதிகாரிகள் சபைக்கு அதன் நிர்வாகத்தை பொறுப்பளித்தல்.
 
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்ட யாப்பின் பிரகாரம், ஜனநாயக மற்றும் சுயாதீனமான முறையில் புதிய தேர்தலை நடத்துதல்.
 
இந்த விடயங்களை முழுமைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் 211 நாடுகளை சேர்ந்த அணிகள் போட்டியிட்டு வருகிற நிலையில், இலங்கை அணி சர்வதேச தரப்படுத்தலில் இறுதியாக 207ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.