புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (10:56 IST)

ஹாங்காங் பாதுகாப்பு சட்டம்: சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா

சீன கம்யூனிச கட்சி அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.


ஹாங்காங் விவகாரத்தில் சீனா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
 
சீன அரசின் இப்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்துமென அமெரிக்கா கூறி உள்ளது.
 
ஹாங்காங்கின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் பாதுகாப்பு சட்டத்தை இயற்றும் சீனாவை அமெரிக்கா நிச்சயம் தண்டிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
 
சீனா கூறுவது என்ன?
 
அமெரிக்காவின் இந்த முடிவு தவறானது. அதனை திரும்பப் பெற வேண்டும் என சீனா கூறி உள்ளது. சீன நாடாளுமன்றம் கூட உள்ள சமயத்தில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.
 
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ள கூட்டத் தொடரில், சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக் குழு ஹாங்காங் பாதுகாப்பு சட்டம் குறித்து விவாதிக்கும்.
 
ஏற்கெனவே சீன நாடாளுமன்றம் இந்த சட்டத்திற்கு இசைவளித்துள்ள சூழலில், இப்போது அதன் நிலை குழு இந்த சட்டம் குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும்.

என்ன சட்டம் அது?
 
தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது.அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும் என்கிறது சீனாவின் இச்சட்டம்.
 
இதனை ஹாங்காங் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த சட்டத்திற்கு எதிராக மே மாதம் முதல் தொடர் போராட்டம் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
 
யார் அந்த அதிகாரிகள்?
 
எந்தெந்த அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிடவில்லை.
 
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம், “அமெரிக்காவின் தவறான நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறோம்,”என்று கூறி உள்ளது.