வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (12:52 IST)

கோட்சே பெயரில் நூலகம் அமைத்த இந்து மகாசபா தலைவர்: எழும் கடும் எதிர்ப்பு

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே பெயரில் மத்தியப்பிரதேசத்தில் நூலகம் திறந்த இந்து மகாசபா துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"மத்தியப் பிரதேசம் குவாலியரில் இந்து மகாசபாவின் தேசியத் துணைத்தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே பெயரில் நூலகம் ஒன்றைத் திறந்துவைத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், தேசியத் தலைவர்கள் மற்றும் பிரிவினைக்கு எதிரான கோட்சேவின் பதிலடி குறித்தும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள இந்த நூலகம் பயன்படும்" எனஹிந்து மகாசபாவின் தேசியத் துணைத் தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

இவரின் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் இதில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை

சென்னையில் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 8-ம் தேதி இரவு செங்கல்பட்டு செல்லும் ரயிலில் தூங்கிவிட்ட நிலையில், நள்ளிரவு ஆகிவிட்டதால் சேவை முடிந்த பிறகு அந்த ரயில் பணிமனைக்கு சென்றது.

அப்போது, ரயிலிலை சுத்தம் செய்ய வந்த 2 ஒப்பந்தப் பணியாளர்கள், பெண்ணை மிரட்டி பாலியல் கொடுமை இழைத்தனர். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 12) ரயில் பயணிகள் சங்கம் சார்பில் குரோம்பேட்டை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை ரயில்வே அதிகாரிகளிடம் அளித்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திபெத்தில் சீனா புதிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்குகிறதா?

திபெத்தில் மிகப்பெரிய பாதாள சுரங்கப்பாதைகளில் ராணுவ வசதியையும், ராணுவ சரக்குப்போக்குவரத்து மையத்தையும் சீனா கட்டமைத்து வருவதாக, செயற்கைக்கோள் புகைப்படங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுளள்து.

"திபெத்தின் ஜிகாட்ஸே பகுதியில் விமான நிலையம் அருகே, சீனா ஏற்படுத்தி வரும் இந்த புதிய கட்டுமானம், ஏவுகணைகளை இருப்பு வைப்பதற்கான சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புதிய செயற்கைக்கோள் படங்களின்படி, திபெத்தின் ஜிகாட்ஸில் ஒரு பெரிய இராணுவ தளவாட மையத்தை சீனா செயல்படுத்திவருகிறது. நடைமுறை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) முழுவதும் செயல்பாடுவதற்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை இருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ட்விட்டரில் திறந்த-மூல புலனாய்வு ஆய்வாளரால் பகிரப்பட்ட புதிய செயற்கைக்கோள் படங்களில் ஜிகாட்ஸ் விமான நிலையத்திற்கு தெற்கே உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தெரிகின்றன. இது ஒரு ரயில் பாதையுடன் இணைக்கிறது. சீன இராணுவத்துக்கான ஒரு தளவாட மையமாக உள்கட்டமைப்பு இருக்கும் என்று படங்கள் தெரிவிக்கின்றன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.