1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (23:33 IST)

இலங்கையில் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் - அரசு முடிவு

Srilanka
இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
 
கொழும்பில் இன்றிரவு நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இதன்படி, துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம், விவசாயம், விவசாய பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு, பெட்ரோல் மற்றும் டீசலை பெட்ரோலிய கூட்டுதாபனம் விநியோகிக்கும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினர், தமது வீடுகளில் இருந்தவாறு தமது பணிகளை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
நாடு எதிர்நோக்கியுள்ள அசௌரியமான சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அவ்வாறு இல்லையென்றால், பெட்ரோலிய கூட்டுதாபனம் வசம் காணப்படுகின்ற, குறிப்பிட்டளவு எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்;பிடுகின்றார்.
 
 
இதனால், எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் நடத்திச் சென்று, ஏனைய சேவைகளை நடத்தி செல்லாதிருப்பதற்கு அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
இதேவேளை, பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலான தீர்மானத்தை, அந்தந்த பாடசாலைகளின் பிரதானிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருக்கு எடுக்க முடியும் என கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.
 
 
பாரியளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தாத, கிராமிய மட்டத்திலுள்ள பாடசாலைகளை நடத்தி செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அதைதவிர, பிரதான நகரங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் தேதிக்கு பின்னர் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை முறையாக விநியோகிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
 
 
குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதற்கான பொது போக்குவரத்து சேவைகளை, அரச பேருந்துகளை பயன்படுத்தி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை பெரும்பாலும் இடைநிறுத்துவதற்கு ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
 
சுற்றுலா துறை மற்றும் ஏற்றுமதி துறை ஆகியவற்றை, கையிருப்பில் காணப்படுகின்ற எரிபொருளை கொண்டு, முன்னெடுத்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதி உச்ச தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், நாட்டில் கையிருப்பில் காணப்படும் எரிபொருளின் அளவு மிக குறைவாகவே காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அரசாங்கம் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் நடத்தி செல்ல தீர்மானித்துள்ளது.