செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (19:35 IST)

"முதலில் தமிழர்களுக்கு உரிமை பிறகு கலப்புத் திருமணம்" - விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார்.
 
இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
 
அவருடைய கலப்பு இனவாக்கம் என்ற கருத்து காலத்திற்கு ஒவ்வாதது, மக்களின் இயற்கை வாழ்க்கை முறைக்கு முரணானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிபிசி தமிழோசையிடம் வடபகுதி மக்களில் சிலர் தெரிவித்தனர்.
 
சாதி, மதம், இனம் என்பவை சமூகத்தில் பெரிய செல்வாக்கையும் ஆளுமையும் செலுத்தும் விஷயங்கள் என்பதால் கலப்புத் திருமணம் செய்வதென்பது எதிர்கால சந்ததியினர் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பிபிசியிடம் பேசிய பலர் தெரிவித்தனர்.
 
கலப்புத் திருமணம் செய்பவர்களில் யாராவது ஒருவர் தனது தனித்துவத்தையும், அடையாளத்தையும் இழக்க வேண்டி வரும். இது நிச்சயமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
 
எனினும் தனது பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், தான் அதற்கு எதிரானவன் அல்ல என்று விக்னேஸ்வரன் விளக்கியுள்ளார்.