செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (14:50 IST)

விவசாயிகள் போராட்டம், அர்னாப், பட்ஜெட் தொடர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் சோனியா பேச்சு

நாட்டின் ராணுவ நடவடிக்கை தொடர்பான அதிகாரபூர்வ ரகசியங்களை வெளியிடுவது தேசத்துரோகம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தம் வாட்சாப் உரையாடலில் 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி முன்கூட்டியே பூடகமாக விவாதித்ததாக கூறப்படும் விவரங்கள் வெளியாகி சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள நிலையில் சோனியாக காந்தியின் இந்த விமர்சனம் வந்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் சோனியா பேசியதாக கூறப்படும் உரை ஊடகங்களுக்கு தரப்பட்டது.
அந்த உரையிலேயே சோனியாவின் மேற்கண்ட கருத்து இடம் பெற்றிருந்தது.

"தேசப் பாதுகாப்பு எப்படி சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சமீபத்தில் வேதனை தரும் செய்திகள் வெளியாயின.

ராணுவ நடவடிக்கை தொடர்பான அலுவல் ரகசியங்களை கசியவிடுவது தேசத் துரோகம் என்று அந்தோனி தெரிவித்தார்.

ஆனால், அம்பலமான உண்மைகள் தொடர்பாக அரசு காக்கிற கனத்த மௌனம் காதுகளை செவிடாக்கக்கூடியது" என்று கூறினார் சோனியா.

"தேசியம், தேசபக்தி ஆகியவை குறித்து மற்றவர்களுக்கு சான்றிதழ் தருகிறவர்கள் தற்போது அம்பலப்பட்டு நிற்கிறார்கள்" என்று குறிப்பிட்டார் சோனியா.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

முன்னதாக, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்து குறிப்பிட்டு சோனியா தம் உரையை தொடங்கினார்.

"தொடங்கவுள்ளது பட்ஜெட் கூட்டத் தொடர்தான் என்றாலும், மக்கள் நலம் தொடர்பான நெருக்கும் பல பிரச்சனைகள் முழுவதுமாக விவாதிக்கப்படவேண்டியுள்ளன. ஆனால், இதற்கு அரசு ஒப்புக்கொள்ளுமா என்பதைப் பார்க்கவேண்டும்" என்று குறிப்பிட்ட சோனியா, விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அரசு பேச்சுவார்த்தை என்ற நாடகத்துக்கு இடையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் அசட்டையாக, வன்மமாக நடந்துகொள்கிறது.

விவசாயிகள் எதிர்க்கிற இந்த மூன்று வேளாண் சட்டங்களும், அவசரத்தில் தயாரிக்கப்பட்டு, அதன் தாக்கங்கள், விளைவுகள் குறித்து பொருளுள்ள வகையில் விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு வேண்டுமென்றே மறுக்கப்பட்டது" என்று கூறினார்.

"தொடக்கத்தில் இருந்தே நமது நிலை மிகத் தெளிவாக உள்ளது. நாம் அவற்றை உறுதியாக நிராகரிக்கிறோம். நம் உணவுப் பாதுகாப்பின் கடைக்கால்காக உள்ள விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, அரசு கொள்முதல், பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றை இந்த மூன்று சட்டங்களும் நாசம் செய்துவிடும்" என்று சோனியா குறிப்பிட்டார்.

வீரம் செறிந்த நமது சுகாதார, முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து முமுமையாக முடிக்கப்படும் என்று நம்புகிறோம். கொரோனா உலகத் தொற்றை கையாண்ட விதத்தால், இந்த அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல முடியாத துயரங்களைத் தந்தது. இதன் வடுக்கள் ஆற பல ஆண்டுகள் ஆகும்.

பொருளாதார சூழ்நிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கவலைக்கிடமாகவே உல்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அழிவை சந்தித்துள்ளன. அரசு அவற்றுக்கு ஆதரவு ஆதரவுக் கரம் நீட்டவில்லை. எவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டுமோ அவற்றுக்கு முன்னுரிமை தந்து அரசு செலவிடவேண்டிய நேரத்தில், வெறும் தனி நபர் டாம்பீகத்துக்கான திட்டங்கள் என்று சொல்லக்கூடிய திட்டங்களுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழிலாளர், சுற்றுச்சூழல் சட்டங்களை அரசு பலவீனப்படுத்தியுள்ள விதம் வேதனை தருகிறது. சிரத்தை எடுத்து உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகள் தனியார் மயமாக்கப்படுகின்றன.

கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் அரசைப் பிடித்து ஆட்டுகிறது. இதை எப்போது காங்கிரஸ் கட்சி ஏற்கவோ, ஆதரிக்கவோ செய்யாது என்று குறிப்பிட்டார் சோனியா காந்தி.

அவரது உரை வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் என்ன பிரச்சனைகளை எழுப்பும் என்பதற்கான ஒரு முன்னோட்டம்போல உள்ளது.