மெக்ஸிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது
மெக்ஸிகோ நாட்டின் மிக மோசமான போதைப் பொருள் கும்பல்களில் ஒன்றான ஜெடாஸின் தலைவன் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸீ - 42 என்று அறியப்படும் ஒமர் ட்ரெவினோ மொரலே, புதன் கிழமையன்று மெக்ஸிகோவின் வடக்கு மாகாணமான நுவோ லியோனின் மோன்டெர்ரே நகரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இவருடைய சகோதரனான மிகெய்ல் 2013ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டதிலிருந்து மொரலே இந்தக் கும்பலை நடத்திவருகிறார்.
மற்றொரு மிகப் பெரிய போதைப் பொருள் கும்பல் தலைவனான செர்வாண்டோ லா டுடா கோம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குள் மொரலே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
நைட்ஸ் டெம்ப்ளர் என்ற குழுவுக்கு கோம்ஸ் தலைவராக இருந்தார்.
போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், கொலை ஆகிய குற்றங்களுக்காக ஒமர் ட்ரெவினோ மொரலே மெக்ஸிகோவிலும் அமெரிக்காவிலும் தேடப்பட்டுவந்தார்.
மோன்டெர்ரே நகரின் புறநகர்ப் பகுதியான சான் பெத்ரோ கார்ஸா கார்ஸியாவில் ஒமர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மெக்ஸிக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கல்ஃப் கார்ட்டெல் என மிகச் சக்தி வாய்ந்த கிரிமினல் கும்பலின் அடியாள் கும்பலாக 1990களில் ஜெடாஸ் துவங்கப்பட்டது.
உயர்ரக ராணுவப் பிரிவிலிருந்து வெளியேறிவந்தவர்கள் நிரம்பிய இந்தக் குழு, இதன் கொடூரச் செயல்பாடுகளுக்குப் பெயர் போனது.
2011ஆம் ஆண்டில், மோன்டெர்ரே காஸினோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெட்டாஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2012ஆம் ஆண்டில் இந்தக் குழுவின் முன்னாள் தலைவர் ஹெரிபெர்டோ லஸ்கானோ கொல்லப்பட்டது, 2013ல் மிகெய்ல் ஏஞ்சல் ட்ரெவினோ மொராலே கைது செய்யப்பட்டது ஆகிய காரணங்களால் இந்தக் கும்பல் பலவீனமடைந்திருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.