வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (21:20 IST)

பட்டியலின சமூகத்திற்கு அனுமதி மறுப்பு: கரூர் கோவிலுக்கும் அதிகாரிகள் பூட்டு - தீண்டாமை தொடர்வது ஏன்?

karur
பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்னையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வியாழனன்று சீல் வைக்கப்பட்டது.
 
கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள மேலப்பதி கிராமத்தின் வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது.
 
இக்கோவில், மேலப்பதியைச் சுற்றியிருக்கும் எட்டு ஊர்களில் வசிக்கும் ஒரு சமுகத்தினருக்குச் சொந்தமானது. இது சுமார் 1500 குடும்பங்களின் குலதெய்வ கோவில் என்றும் கூறப்படுகிறது.
 
கோவில் அமைந்திருக்கும் வீரணம்பட்டியில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.
 
இங்கு திருவிழாவின்போது கோவிலுக்குள் செல்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே எழுந்த பிரச்னையால் வருவாய்த் துறையினர் கோவிலைப் பூட்டி சீல் வைத்தனர்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு பிரச்னையால் ஒரு கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளே இந்தச் சம்பவம் நடந்திருப்பது, தமிழக கிராமங்களில் இருக்கும் கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் நுழைய இன்றும் தொடரும் பிரச்னைகளைப் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
 
ஆண்டுதோறும் இந்தக் கோவிலில் வைகாசி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். இவ்வருடத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 
இரண்டாம் நாளான நேற்று பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது உயர் சமூகத்தைச் சேர்ந்தவர், அவரை உள்ளேவிட மறுத்ததுடன், சாமி கும்பிட அனுமதிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
 
இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கடவூர் வட்டாட்சியர் முனிராஜ், கரூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மோகன், குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பட்டியலின மக்களை சாமி கும்பிட அனுமதிக்காவிடில், கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலை பூட்டப்படுமென அதிகாரிகள் எச்சரித்தனர்.
 
முதலில் கோவில் பூட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளோ அதை மறுத்தனர்.
 
குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலை பூட்டக்கூடாது எனவும், பட்டியலின மக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி சாலை மறியல் போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
 
இதையடுத்து இரு தரப்பினரிடமும் பேசிய அதிகாரிகள் இந்தப் பிரச்னையை சுமூகமாகப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும், அதுவரை கோவிலை தற்காலிகமாகப் பூட்டுவதாகவும் கூறி, கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலுக்கு பூட்டுப் போட்டனர்.
 
கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரான சக்திவேல் பிபிசி தமிழிடம் பேசினார்.
 
அவர், இப்பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர் என்றார்.
 
“பட்டியல் இன சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிப்பதில்லை. காளியம்மன் கோவில் பொது இடத்தில் அமைந்துள்ளது. வீரணம்பட்டியில் இருக்கும் எங்கள் பட்டியலின மக்களை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட விடாமல், வெளியில் நின்று கும்பிடச் சொல்கின்றனர்,” என்றார்.
 
மேலும் பேசிய அவர், "புதன்கிழமை காலை 7.30 மணிக்கு சாமி கும்பிடுவதற்குத் தான் சென்ற போது, மூன்று பேர் வெளியே போய் சாமி கூம்பிடு என வலியுறுத்தியதாக" தெரிவித்தார். மேலும், சாமி கும்பிட்டு, திருநீறு பூசிவிட்டுப் போய் விடுவதாகக் கூறியபோது சட்டையைப் பிடித்து வெளியே தள்ளியதாகக் கூறினார்.
 
“ஊர் மக்கள் என்னை வா, பார்த்துக்கலாம் என வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். ஆன்லைன் மூலமாக நடந்த சம்பவத்தை ஆட்சியரிடம் புகாராக அளித்திருந்தேன்.
 
புகாரின்பேரில் வட்டாட்சியரும் சிந்தாமணி பட்டி காவல் நிலையத்திலிருந்து வந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவில் பொது இடத்தில் இருக்கிறது, எனவே அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு. இல்லையென்றால் கோவிலை பூட்டி விடுவேன் எனச் சொன்னார்கள்,” என்றார்.
 
மேலும் அவர், "அதிகாரிகள் இருக்கும்போதே சாமி கும்பிட அனுமதிக்க மறுப்பவர்கள், எங்களை எப்படி அனுமதிப்பார்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.
 
“சாமி பொதுவானதுதானே, ஏன் எங்களை சாமி கும்பிட வேண்டாம் எனச் சொல்கிறார்கள்? அதற்குக் காரணம் தெரியணும். எங்கள் மக்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும்,” என்றார்.
 
மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வீரணம்பட்டி சின்னசாமி நம்மிடம் பேசுகையில், "குறிப்பிட்ட கோவில், மேலப்பகுதி, வீரணம்பட்டி, மாலப்பட்டி, சர்க்கம்பட்டி, கரிச்சிப்பட்டி உள்ளிட்ட எட்டு ஊரில் வசிக்கும் தங்களது சமூகத்தினருக்குச் சொந்தமானது" என்றார்.
 
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபடும் இக்கோவிலில் தனது பாட்டன் காலத்திலிருந்து அவர்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
 
“கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகத்தின்போது, பட்டியலின மக்கள் சாமி கும்பிட வந்தபோது பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னை சிந்தாமணி பட்டி காவல் நிலைநிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிக்கப்பட்டது. அப்போது அனைவரும் சாமி கும்பிடலாம், என்றபோது பட்டியலின மக்கள் வெளியே இருந்து சாமி கும்பிடுவதாகத் தெரிவித்தனர்,” என்றார்.
 
மேலும் பேசிய அவர், "செவ்வாயன்று கோவில் திருவிழாவின்போது பட்டியலின இளைஞர் ஒருவர், அவரே கோவிலுக்குள் வந்து, சாமி கும்பிடாமல் புகைப்படம், வீடியோ எடுத்து பிரச்னை செய்ய முற்பட்டபோது, இளைஞர்கள் சிலர் அவரை வெளியே போகச் சொன்னதாக" குற்றம் சாட்டினார்.
 
அதோடு, “புதன்கிழமை காலை 11.30 மணிக்கு அதிகாரிகள் கோவிலை பூட்டி வைத்துள்ளனர். அதை தெய்வம் பார்த்துக்கும். அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,” என்றார்.
 
சின்னசாமி, "பிரச்னை செய்யும் இளைஞர் ஏற்கெனவே பி.சி.ஆர் வழக்கு தொடுத்துள்ளதாகவும், தற்போது எங்களது இளைஞர்கள் மீது மேலும் வழக்குகள் போட முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இந்தப் பிரச்னை காரணமாக மேளதாளம், அலங்காரம் இல்லாமல், இன்றைக்கு கரகம் எடுத்து கிணற்றில் கரைக்க இருப்பதாகத் தெரிவித்தவர், "நேற்று நடைபெறுவதாக இருந்த நாடகம் மற்றும் சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன," என்றும் கூறினார்.
 
இதற்கிடையே, வியாழன் மாலை, குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகாரிகளிடம் தகவல் சொல்லாமல் கரகத்தை எடுத்து கரைத்துவிட்டனர்.
 
பட்டியலின மக்கள், அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கரகத்தை எடுத்து விழாவை முடித்துவிட்டார்கள் என்றும், தம்மால் சாமி கும்பிட முடியாமல் போய்விட்டது எனவும் குற்றம்சாட்டினர்.
 
இந்தச் சம்பவத்தையடுத்து, வருவாய் கோடாட்சியர் புஷ்பா தேவி கோவிலைப் பூட்டி சீல் வைத்தார்.
 
இதைத்தோடர்ந்து, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
கரகம் கரைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன் பிபிசியிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அனைவரும் வழிபாடு செய்ய கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், பட்டியலின மக்கள் சண்டை போட்டுக்கொண்டு சாமி கும்பிட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
 
“அனைவரும் ஒற்றுமையோடு வழிபாடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தற்சமயம், இரு சமூகத்தினரும் கோவில் திருவிழா முடியும் வரை கோவிலுக்கு வெளியே இருந்து கும்பிட்டுக் கொள்வதாக உறுதியளித்தனர்.
 
திருவிழா முடிந்தவுடன், சுமூகமாகப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் வழிபாடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்.
 
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், குறிப்பிட்ட காளியம்மன் கோவில் அரசுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அது தனிப்பட்ட ஒரு சமூகத்தினருக்குச் சொந்தமானது என்றும பிபிசி தமிழிடம் கூறினார்.
 
“கோவில் திருவிழா இன்றைக்கு (ஜூன் 8) முடிகிறது. நாளை ஜமாபந்தி முடிந்ததும். இரு தரப்பினருடன், நாளை மறுநாள் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடக்க இருக்கிறது. வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி தலைமையில் 30 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 
இதற்கிடையே காளியம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் வைத்த சீலை அகற்றக்கோரி, வருவாய் கோட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது தொடர்பாக, கோவையிலுள்ள பேரூர் ஆதீனகர்த்தர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பிபிசி தமிழிடம் பேசினார்.
 
“எல்லோருக்கும் மன மாற்றம் வரவேண்டும். அப்பர் அடிகள் காலத்திலேயே, 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்தார்கள்.
 
அந்த நிலை படிப்படியாக மாறி, அர்த்தமண்டபத்திற்கு வெளியே நின்று கடவுளைக் கும்பிடுகிறோம். அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதைத் தடுக்கக் கூடாது.
 
திரையரங்குகள், பேருந்துகள், ரயில்கள் என எங்கும் மக்கள் ஒன்றாகச் செல்வதைப் போல கோவில்களுக்கு உள்ளேயும் ஒன்றாகச் செல்லும் வகையில் மனமாற்றம் வர வேண்டும்,” என்றார்.
 
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார், சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தும் உறுதி அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும்.
 
“இந்து சமய அறநிலையத்துறை சட்டம், ஒவ்வொரு கோவிலுக்கும் 3 முதல் 5 பேர் வரை உள்ள ஓர் அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் என்று சொல்கிறது.
 
அக்குழுவில் ஒருவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதேபோல, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் முனைப்பையும் முன்னெடுக்க வேண்டும்.
 
ஆகமம் சார்ந்த கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே முதலில் ஆகமம் சாராத கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்,” என்றார்.
 
மேலும், தீண்டாமை, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இயங்கும் சமூக சீர்திருத்த அமைப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்," எனவும் கூறினார்.
 
இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பகுதி குறைக்கப்படும் என்றார்.