செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (11:35 IST)

இந்தியாவில் குறையும் கொரோனா பரவல்: ஆனாலும் மகிழ முடியாது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் குறைந்து வருகிறதா என்பதை பார்ப்போம்.

அக்டோபர் மாதத்தில் தற்போது வரை இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உண்டாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவே செப்டம்பர் மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 ஆயிரம் பேராக இருந்தது.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 93 ஆயிரம் பேருக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டு வந்தது.

தினசரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை சீராக நீடித்து வந்தாலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கோவிட்-19 தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

ஆகஸ்ட் மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் பேருக்கு இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் இதுவரை சராசரியாக 11 லட்சமாக உள்ளது. செப்டம்பர் மாதம் இந்த சராசரி எண்ணிக்கை 10.5 லட்சம் பேர்.

இந்த எண்ணிக்கைகளை பார்த்தால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைவது போலத்தான் தெரிகிறது.

ஆனால் இதை மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்கின்றனர் நோய்த்தொற்றியல் நிபுணர்கள்.

எண்ணிக்கை குறைவது ஒரு நல்ல சமிக்ஞையாக இருந்தாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது குறைந்து வருகிறதா என்று முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை அதிகரிப்பதும், புதிதாக தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் முடிவெடுக்கப் போதுமானது அல்ல என்கின்றனர் அவர்கள்.

அதற்கு காரணம் இந்தியாவில் செய்யப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளில் சுமார் பாதிக்குப் பாதி ஆன்டிஜென் பரிசோதனைகள்.

இந்த வகை பரிசோதனைகள் உடலில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தாமல் வைரசுக்கு எதிராக போராடும் நோய் எதிர்ப்பு அணுக்கள் ஒருவரது உடலில் இருக்கிறதா என்பதை மட்டுமே கண்டறியும்.

இந்தவகை பரிசோதனைகளின் முடிவுகள் வேகமாக கிடைத்தாலும் இவற்றை முழுமையாக நம்ப முடியாது. சில சமயம் இவற்றின் துல்லியத்தன்மை 50 சதவிகிதம் மட்டுமே.

பிசிஆர் பரிசோதனை எனப்படும் 'பாலிமரேஸ் செயின் ரியாக்சன்' பரிசோதனை இதைவிட துல்லியமானதாக கருதப்படுகிறது. ஆனால் அதற்கு உண்டாகும் செலவு, முடிவுகள் வெளி வருவதற்கான காலம் இரண்டுமே அதிகம்.

இந்தியாவில் தொற்று குறைந்து வருவதாக எண்ணிக்கைகள் காட்டுவது ஆன்டிஜென் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால்தான். ஆனால் உண்மையாகவே குறைந்து வருகிறதா என்பதை உறுதி செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் ஜமீல். இவர் ஒரு முன்னணி நச்சுயிரியல் வல்லுநர்.

இதுவரை இந்தியா முழுவதும் செய்யப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை எத்தனை ஆன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை இந்திய அரசு வெளியிட்டால் மட்டுமே அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பார்த்து இந்தியாவில் வைரஸ் பரவல் குறைந்து வருகிறதா என்பதை அறிவியலாளர்களால் கணிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இல்லாதவர்களும், பரிசோதனை செய்து கொள்ள இந்தியாவில் அனுமதி வழங்கப்படுகிறது.

"இதன் காரணமாக அறிகுறி இல்லாத பலரும் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். இது கூட இந்தியாவில் வைரஸ் பரவல் குறைந்து வருவது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கலாம்," என்று பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின் தலைவர் மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி கூறுகிறார்.

ஆனால் நோய்த்தொற்று பரவல் மாதிரிகள் மற்றும் நோய் எதிர்ப்பு அணுக்கள் உடலில் இருப்பது ஆகியவை குறித்த கருத்துக் கணிப்புகள் இன்னும் கண்டறியப்படாத கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இந்தியாவில் மிகவும் அதிகமான அளவில் இருப்பதாகவே காட்டுகின்றன.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் புள்ளியியல் மற்றும் நோய் பரவலியல் துறை மருத்துவர் ப்ராமர் முகர்ஜி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 முதல் 13 கோடி வரை இருக்கும் என்று கூறுகிறார்.

இது இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்தை விடவும் சற்று குறைவு.

மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸை அழிக்கும் நோய் எதிர்ப்பு அணுக்கள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் ஒன்பது கோடி இந்தியர்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்ததாக முடிவுகள் காட்டுகின்றன.

இது அரசு கூறும் தரவுகளை விட சுமார் 15 மடங்கு அதிகம்.

சரியான கொரோனாஎண்ணிக்கையை கண்டறிவது எப்படி?

இந்தியா முழுவதும் நிகழும் மரணங்களை கணக்கெடுத்து, அவற்றின் காரணங்கள், இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து ஆராய்வதே சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார் மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி.

ஒருவேளை தொற்று இருப்பது குறித்த தரவுகள் குறைவாக காட்டப்பட்டோ, உண்மையாகவே கோவிட்-19 தொற்றின் காரணமாக நிகழும் மரணங்கள் குறைவானாலோ கூட இதை நாம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

தொடக்கம், வளர்ச்சி, உச்சம், சரிவு

எந்த ஒரு பெருந்தொற்றும் தொடக்கம், வளர்ச்சி, உச்சம் மற்றும் சரிவு ஆகிய நான்கு நிலைகளை அடையும் என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் கல்லூரியைச் சேர்ந்த ஆடம் குச்சார்ஸ்கீ கூறுகிறார்.

சில நேரங்களில் இந்த நிலைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திரும்பத் திரும்ப நிகழவும் வாய்ப்புண்டு என்று கூறுகிறார் அவர்.

அதாவது நோய் தொற்று பரவல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வளர்ச்சி அடையலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை சரிந்து பின்னர் மீண்டும் உச்சநிலையை அடையலாம்.

2009ஆம் ஆண்டு பிரிட்டனில் பன்றிக் காய்ச்சல் பரவல் தொடங்கியபோது கோடை காலத்தின் தொடக்கத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து ஜூலை மாதம் உச்சத்தை எட்டியது.

அதன்பின்பு சரிந்து அக்டோபர் மாதம் மீண்டும் உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றும் எந்த உணர்வும் தற்காலிகமானது மற்றும் மிகவும் குறைந்த காலம் மட்டுமே நீடிக்கக் கூடியது என்று கூறுகிறார் மருத்துவர் முகர்ஜி.

இந்தியாவில் விழாக்காலம் தொடங்கிவிட்டது. பொருட்களை வாங்குவதற்காக இந்தியர்கள் கூட்டமாக வெளியே செல்லத் தொடங்குவார்கள்.

எந்த அளவுக்கு பொதுவெளியில் நடமாடுகிறோமோ அந்த அளவுக்கு 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' நிகழ்வுகள் நிகழ வாய்ப்புண்டு.

அதாவது ஒருவர் மூலமாக பல நூறு பேருக்குக்கூட தோற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது என்று நினைத்து மகிழ்ச்சி அடையாமல், முகக் கவசத்தை அணிந்துகொண்டும், தொடர்ந்து கைகளைக் கழுவிக் கொண்டும், கூட்டமான இடங்களில் இருந்து விலகியும் இருப்பதே இப்போதைக்கு சிறந்தது.