செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (21:07 IST)

ஹிட்லருக்காக போரிட்டவரால் கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி

யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார்,
 
இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
 
யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (​​ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க 98 வயதான யாரோஸ்லாவ் ஹன்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
அவை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அவைத் தலைவர் அந்தோனி ரோட்டா, யாரோஸ்லாவ் ஹன்காவை "ஹீரோ" என்று வர்ணித்ததை அடுத்து, அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
யுக்ரேனியரான யாரோஸ்லாவ் ஹன்கா இரண்டாம் உலகப் போருக்குப் பின் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து தற்போது ஒன்டாரியோவில் வசித்து வருகிறார்.
 
ஹன்காவுக்கு நாஜி படைகளுடன் உறவு இருந்தது பற்றி தனக்குத் தெரியாது என்றும், அவரை அந்நிகழ்வில் பங்கேற்க அழைத்ததில் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் அவைத் தலைவர் ரோட்டா கூறியுள்ளார்.
 
இருப்பினும், ரோட்டா உடனடியாகப் பதவி விலகவேண்டும் என பலதரப்பிலும் வலுவான கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
 
திங்கள் கிழமையன்று,பிரதமர் ட்ரூடோ செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாடாளுமன்றத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.
 
 
நாடாளுமன்ற சபாநாயகர் அந்தோணி ரோட்டா திங்கள் கிழமையன்று இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்டார்.
 
"இது கனடாவின் நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மிகவும் தர்மசங்கடமான சங்கடமான ஒன்று." என்றார்.
 
வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கேலரியில் ஹன்கா அமர்ந்திருந்தபோது, ​​அவரைச் சுட்டிக்காட்டிய ரோட்டா, அந்த நபர் "ஒரு யுக்ரேனிய ஹீரோ, ஒரு கனடிய ஹீரோ, அவருடைய அனைத்துப் பணிகளுக்கும் நாடு கடமைப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி" என்று கூறினார்.
 
போரின் போது ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்கள் ஜெர்மனி தரப்பில் போரிட்டனர். ஆனால் லட்சக் கணக்கான வீரர்கள் சோவியத்தின் செஞ்சேனைக்காகப் பணியாற்றினர்.
 
ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட ரோட்டா, ஹன்காவைக் கௌரவிப்பதற்காக "நான் மேற்கொண்ட முயற்சி தவறு என அதற்குப் பின்னர் நான் பல தகவல்களைத் தெரிந்துகொண்டதால் தான் எனக்குத் தெரியவந்தது" என்று கூறினார்.
 
"சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகள் உட்பட எவரும் எனது எண்ணம் அல்லது எனது கருத்துக்களை நான் வழங்குவதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை," என்று அவர் கூறினார்.
 
 
"நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் முற்றிலும் என்னுடையது. இதற்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன். நாடாளுமன்றத்துக்கு வரவழைக்கப்பட்ட அந்த நபர், எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அதனடிப்படையிலேயே அவர், யுக்ரேன் அதிபரின் வருகையின் போது நாடாளுமன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்," என ரோட்டா தெரிவித்துள்ளார்.
 
மேலும், "கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களிடம் நான் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டு, மன்னிப்பைக் கோர விரும்புகிறேன். எனது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
 
அவரது இந்தப் பேச்சு எதிர்வினையாற்றிய கனடாவின் யூதக் குழுவான 'இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்' அவர் மன்னிப்புக் கோருவதைப் பாராட்டுவதாகக் கூறியது, "இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய முறையான ஆய்வு அவசியம்" என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
மீண்டும் திங்களன்று நாடாளுமன்ற அவையிலிருந்த ஒவ்வொருவரிடமும் ரோட்டா நேரில் மன்னிப்பு கேட்டார்.
 
இந்தச் சம்பவத்தை "மன்னிக்க முடியாத பிழை" என்று கூறிய புதிய ஜனநாயகக் கட்சியின் எம்பி பீட்டர் ஜூலியன் உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரோட்டா உடனடியாக பதவி விலகவேண்டும் என கோரினர்.
 
"துரதிர்ஷ்டவசமாக ஒரு புனிதமான நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்," என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
 
திங்கள் கிழமையன்று பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சி உறுப்பினரான ரோட்டாவை பதவி விலகுமாறு அவர் நிர்பந்திக்கவில்லை.
 
ஹன்காவை நாடாளுமன்றத்துக்கு அழைத்தது சபாநாயகர் அலுவலகத்தால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு என அவரது அலுவலகம் கூறியுள்ளது.
 
ஹன்காவுக்கும் பிரதமர் ட்ரூடோவுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டையும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
 
 
யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா நாடாளுமன்றத்திற்கு வருகைபுரிந்தார்.
 
ஜெர்மனியின் நாஜிப் படையுடன் உறவு கொண்ட ஒருவரை நாடாளுமன்றத்தில் கௌரவித்தது கனடாவின் எல்லைகளைத் தாண்டி தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
 
கனடாவுக்கான போலந்து நாட்டின் தூதர் கோபத்தை வெளிப்படுத்தியவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர், "அத்தகைய வில்லன்களின் கதைகளை மாற்றி நல்லவர்களாக்கும்" இந்தச் செயலுக்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
 
திங்கள் கிழமையன்று பேசிய ட்ரூடோ, யுக்ரேன் மீது ஒரு தவறான கருத்தைத் திணிக்க ரஷ்யா இதைப் பயன்படுத்தும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீதான தனது போர் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்ற போது, தனது நாட்டைக் காப்பாற்றும் நடவடிக்கை தான் அது என்றார்.
 
"ரஷ்யாவின் தவறான தகவல்களைப் புறந்தள்ளுவதில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவதிலும், யுக்ரேனுக்கான எங்கள் உறுதியான தெளிவான ஆதரவைத் தொடர்வதும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என ட்ரூடோ கூறினார்.
 
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கனடா நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து திங்கள் கிழமையன்று பேசிய போது, அது "மிகவும் சீற்றமளிக்கும் விஷயம்" என்று விமர்சித்தார்த.
 
"கனடா உட்பட பல மேற்கத்திய நாடுகள், இரண்டாம் உலகப் போரின் போது யார் யாருடன் எப்படி இணைந்து சண்டையிட்டார்கள், என்ன நடந்தது என்று தெரியாத இளம் தலைமுறையைத் தான் வளர்த்துள்ளன. மேலும் இந்த இளம் தலைமுறையினருக்கு பாசிசத்தின் அச்சுறுத்தல் பற்றி எதுவும் தெரியாது," என்று அவர் கூறினார்.
 
இரண்டாம் உலகப் போரின்போது, ​​ஹன்கா 14வது வாஃபென்-எஸ்எஸ் கிரெனேடியர் பிரிவில் பணியாற்றினார். இது கலீசியா பிரிவு என்றும் அழைக்கப்படுகிறது. நாஜிகளின் கட்டளையின் கீழ் பெரும்பாலும் யுக்ரேனியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வப் பிரிவாக அது இருந்தது.
 
இப்பிரிவின் உறுப்பினர்கள் போலந்து மற்றும் யூதக் குடிமக்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இருப்பினும் இப்பிரிவினர் மீது எந்த ஒரு நீதிமன்றமும் ஒரு போர்க் குற்றத்தை இதுவரை சுமத்தவில்லை.
 
1945 இல் மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைவதற்கு முன்பு இந்தப் பிரிவு முதல் யுக்ரேனியப் பிரிவு என மறுபெயரிடப்பட்டது.
 
ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் யுக்ரேனிய ஆய்வுகளின் தலைவரான டொமினிக் ஏரெல், சிபிசி நியூஸிடம் பேசுகையில், ஹன்கா பணியாற்றிய படைப்பிரிவு ஆயிரக்கணக்கான யுக்ரேனிய தன்னார்வலர்களை ஈர்த்திருந்தது என்றும், பலர் யுக்ரேனிய சுதந்திரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்படைப் பிரிவில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.