திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (22:23 IST)

இலங்கை நெருக்கடி: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நடப்பது என்ன?

Flight
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது, இலங்கை விமான சேவைக்கு இன்றும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
கோளாறு காரணமாக நான்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்தே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
மேலும், இயந்திர கோளாறு காரணமாக மூன்று விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்தார்.
 
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரே இதனைக் கூறியிருந்த பின்னணியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டது.
 
அத்துடன், அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் ஸ்ரீலங்கன் விமானமொன்றில் ஏற்பட்ட கோளாறை அடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
 
ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில், பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஏர் லங்கா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனமானது, தேசிய விமான சேவை நிறுவனமாக விளங்குகின்றது.
 
ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை வழங்கி வருகின்றது.
 
இந்த நிலையில், ஆசியாவில் முக்கிய விமான சேவையாக விளங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் சில பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றது.
 
குறிப்பாக 90ம் ஆண்டு காலப் பகுதியில் 6 விமானங்களுடன், ஏர் லங்கா விமான சேவை நடத்தப்பட்டுள்ளது.
 
படிப்படியாக முன்னேற்றமடைந்து வந்த இந்த விமான சேவை நிறுவனமானது, 90களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
 
நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை அமைச்சர் (துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை)
 
யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் இலங்கையின் சுற்றுலா துறையானது, 2019ம் ஆண்டே பாரிய வீழ்ச்சி பாதையை நோக்கி முதல் தடவையாக நகர்ந்தது.
 
அதற்கு பிரதான காரணமாக ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் அமைந்தது.
 
இந்த காலப் பகுதியில் 27 விமானங்களை கொண்ட நிறுவனமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளங்கியது.
 
எனினும், 2020ம் ஆண்டு அந்த எண்ணிக்கை, 25 ஆக குறைவடைந்திருந்தது.
 
2021ம் ஆண்டு அந்த தொகையானது, 24ஆக குறைவடைந்து, இன்று வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் வசம் 24 விமானங்களே காணப்படுகின்றன.
 
இந்த 24 விமானங்களும் இன்று சேவையில் ஈடுபடுகின்றதா என்ற கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் ''இல்லை" என்றே கூற வேண்டும்.
 
இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் மூன்று விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
அதேசமயம், மற்றுமொரு விமானமும் கோளாறு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியொருவர், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
 
இதன்பிரகாரம், நான்கு விமானங்கள் சேவையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 விமானங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வசம் காணப்படுகின்ற 24 விமானங்களில், குத்தகை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, குத்தகை முடிவடைந்த விமானங்களும் தற்போது இந்த நிறுவனத்திடம் காணப்படுகின்றன.
 
இந்த விமானங்களை பல வருட காலமாக செய்ய முடியாது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும், பிபிசி தமிழ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியொருவரிடம் வினவியது.
 
''கோவிட் காலப் பகுதியில் எம்மிடம் இருந்த 24 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலான விமானங்கள் தரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த விமானங்களை படிப்படியாக சேவையில் ஈடுபடுத்தும் போது, சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட ஆரம்பித்தன.
 
இயந்திரத்திலும் சில கோளாறுகள் ஏற்பட்டிருந்தன. விமான இயந்திரங்களை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே உலகில் உள்ளன. எமது நிறுவனத்தின் விமானங்களின் இயந்திரங்கள் அனைத்தும் ரோல்ஸ் ரோயிஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டவை.
 
இந்த கோளாறு ஏற்பட்டுள்ள பாகத்தை ரோல்ஸ் ரோயிஸ் நிறுவனத்திற்கு கழற்றி அனுப்ப வேண்டும். உலகம் முழுவதும் உள்ள விமான சேவைகளுக்கு இவ்வாறான பிரச்னைகள் வந்ததை அடுத்து, இயந்திர திருத்தத்திற்கு ரோல்ஸ் ரோயிஸ் நிறுவனத்திற்கு பாரிய கேள்வி ஏற்பட்டது.
 
கோளாறு ஏற்பட்ட பாகத்தை திருத்துவதற்கு அவர்கள் எமக்கு நேரத்தை ஒதுக்கி தர வேண்டும். அந்த நேரத்தை ஒதுக்கிக் கொள்ள எமக்கு சிரமம் ஏற்பட்டது. உலகிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வாறான பிரச்னைகளை எதிர்நோக்கியிருந்தன. அதுவே பிரதான பிரச்னையாக காணப்பட்டது" என அந்த அதிகாரி கூறினார்.
 
அதேபோன்று, விமானத்தின் இயந்திரமொன்றை திருத்துவதற்கு பல மில்லியன் டாலர் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்படும் என அறிய முடிகின்றது.
 
பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், இலங்கையிலிருந்து கடந்த காலங்களில் டாலரை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையை எதிர்கொண்டமையினால், விமான திருத்தத்திற்கான பணத்தை உரிய வகையில் அனுப்ப முடியாத சிக்கலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்நோக்கியுள்ளது.
 
 
இவ்வாறான பிரச்னைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் சில தினங்களில் இந்த பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களில், இயந்திர பாகங்கள் திருத்தப் பணிகளுக்காக ரோல்ஸ் ரோயிஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரியொருவர் எமது செய்திப் பிரிவுக்கு கூறினார்.
 
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் நேற்று முன்தினம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று இயந்திர கோளாறு காரணமாக அந்த விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
இதையடுத்து, கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணித்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை திருத்திய நிலையில், குறித்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
 
விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சாதாரணமான விடயம் என்ற போதிலும் அதனை ஒரு சில தரப்பினர் பெரிதாக்க முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முக்கிய அதிகாரியொருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.