செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (09:43 IST)

கொரோனா தடுப்பூசி: “பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது” - ஐ.நா கடும் எச்சரிக்கை

சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
 
ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கக் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.
 
இதுவரை பணக்கார நாடுகளில் 3.9 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஒரு ஏழை நாட்டில் வெறும் 25 டோஸ் தடுப்பூசிதான் வழங்கப்பட்டிருக்கிறது.
 
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விடயத்தில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா என இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
 
முன்னதாக, உலக சுகாதார அமைப்பால் ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டது. ஐநா சபையின் பொது சுகாதார அமைப்பு சர்வதேச அளவில் அவசர நிலையை முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என அக்குழு கூறியது. அதோடு கொரோனா தொடர்பாக சீனா விரைவாக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
 
இதுவரை, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுக்கென தனியாக கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டன. மற்ற நாடுகள், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன.
 
கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இதில் பெரும்பாலான நாடுகள், தடுப்பூசியை தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு விநியோகித்துக் கொள்வதற்கே முன்னுரிமை கொடுத்துக் கொண்டன.
 
உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியது என்ன?
"நான் வெளிப்படையாக பேச வேண்டும். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளிலுள்ள உயிர்களும் அவர்களின் வாழ்கையும் தான் விலையாகக் கொடுக்கப்படும்" என நேற்று (ஜனவரி 18, திங்கட்கிழமை) நடந்த உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் பேசினார் டெட்ரோஸ்.
 
"முதலில் எனக்கு தான் தடுப்பூசி என்கிற அணுகுமுறை, நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும் விதத்தில் அமையும். இது தடுப்பூசியின் விலையை அதிகரிக்கும், பதுக்கலை ஊக்குவிக்கும். இது போன்ற செயல்களால் கொரோனா நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும்" என்றார் டெட்ரோஸ்.
 
டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ்
 
எல்லா நாடுகளும் முழுமையாக கோவேக்ஸ் (உலக அளவில் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் திட்டம்) திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.
 
வரும் 2021 ஏப்ரல் 7-ம் தேதிக்குள் (உலக சுகாதார தினத்தன்று), உறுப்பு நாடுகள் அனைத்திலும், கொரோனா மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொண்டு வரும் வகையில், நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார் டெட்ரோஸ்.
 
இதுவரை 180 நாடுகள் கோவேக்ஸ் திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பும், சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசியை ஆதரிக்கும் குழுக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. உலக நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும், அப்போதுதான் நாடுகள் சார்பாக, மருந்து நிறுவனங்களிடம் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க முடியும் என்பது தான் இதன் நோக்கம்.
 
இந்த திட்டத்தில் இருக்கும் 92 ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான நிதி நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்படும்.
 
"ஐந்து மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருக்கிறோம். பிப்ரவரியில் இருந்து விநியோகத்தைத் தொடங்கவிருக்கிறோம்" என டெட்ரோஸ் கூறியுள்ளார்.
 
டெட்ராஸ் கூறியதற்கு உலக நாடுகளின் பதில் என்ன?
 
"உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யும் கோவேக்ஸ் திட்டத்தை நிதி ரீதியாக பெரிய அளவில் ஆதரிக்கும் நாடு பிரிட்டன்" என பிரிட்டனின் சுகாதார செயலர் மேட் ஹேன்காக் கூறியுள்ளார்.
 
பிரிட்டன் இதுவரை கோவேக்ஸ் திட்டத்துக்கு 734 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது.
 
பிரிட்டன் அரசின் தரவுகள் படி, இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரிட்டன் நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றிருக்கிறார்கள்.
 
'மக்கள் தடுப்பூசி கூட்டமைப்பு' என்கிற தடுப்பு மருந்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அமைப்பு, பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் பதுக்குவதாகக் குற்றம்சாட்டியது. அதோடு ஏழை நாடுகளிலுள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லாமல் போகலாம் எனக் கூறப்பட்டது.
 
70 ஏழை நாடுகள் தங்கள் மக்களில் 10-ல் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியை வழங்க முடியும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.
 
கொரோனா தடுப்பூசி யாருக்கு, எங்கே, எப்போது கிடைக்கும்?
கொரோனா தடுப்பூசி: 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
குறிப்பாக கனடா கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கனடா தன் நாட்டு மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை விட ஐந்து மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.
 
"இதுவரை தடுப்பு மருந்துகள் வந்து சேரவில்லை என்பதால், கனடா அதிக கொரோனா தடுப்பூசிகளை பதுக்குகிறது என்பது அனுமானத்தின் அடிப்படையிலானது" என கனடாவின் சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் கரினா கோல்ட் கடந்த மாதம் கூறியிருந்தார். அதோடு வளரும் நாடுகள் கொரோனா பிரச்சனையை சமாளிக்க, கனடா 380 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
 
உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மீதான விமர்சனங்கள் என்ன?
 
உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு தன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
 
அதில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா ஆகிய இருவருமே, கொரோனாவின் ஆரம்ப காலத்திலேயே விரைவாகச் செயல்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
 
2019-ம் ஆண்டின் இறுதியில், வுஹானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே விரைவாகச் செயல்பட்டு, கொரோனா வைரஸை அந்த நகரத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்கிறது அவ்வறிக்கை.
 
அதோடு, உலக சுகாதார அமைப்பு 2020 ஜனவரி 30-ம் தேதி தாமதமாக அவசர நிலையை அறிவித்ததையும் நிபுணர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
 
"உலக அளவில் பெருந்தொற்று குறித்து எச்சரிக்கும் அமைப்பு தேவையானதை செய்யக் கூடியதாக இல்லை. உலக சுகாதார அமைப்பு அப்பணியைச் செய்ய போதுமான அதிகார பலம் கொண்டதாக இல்லை" என்கிறது நிபுணர்கள் குழுவின் அறிக்கை.
 
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலென் க்ளார்க் மற்றும் லைபீரியாவின் முன்னாள் அதிபர் எலென் ஜான்சன் சர்லீஃப் ஆகியோர் இந்தக் குழுவை வழிநடத்தினர்.