1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:51 IST)

கொரோனா தடுப்பூசி: மதுவுக்கு 10% தள்ளுபடி முதல் இலவச சமையல் எண்ணெய் வரை - மக்களை கவருமா ஊக்கப்பரிசுகள்?

இந்தியாவில் இலவசங்கள் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகி இருக்கிறது
 
மெதுவான தொடக்கத்திற்குப் பின், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த சில மாதங்களாக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
 
டிசம்பர் 31-க்குள் வயது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்ற அதன் ஆரம்ப லட்சிய இலக்கை அடைவதை தவற விட்டிருந்தாலும், 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த இந்தியர்கள் முதல் தவணை தடுப்பூசியையும், 55 சதவீதத்திற்கு மேற்பட்டோர் இரு தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
 
ஆனாலும், புதிய ஒமிக்ரான் திரிபு பரவலான அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புடைய லட்சக்கணக்கானோருக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் செலுத்தப்படவில்லை.
 
மக்களை தடுப்பூசி மையங்களை நோக்கி இழுக்க, சில மாநில அரசுகள் வழக்கத்திற்கு மாறான பொருட்களை வழங்கி வருகின்றன.
 
கிறிஸ்துமஸ் பயணங்களால் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கும் - எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்
கோவோவேக்ஸ் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் - 10 தகவல்கள்
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் நகராட்சி நிர்வாகம் ஒன்று, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்யை இலவசமாக வழங்கி வருகிறது. இது, குறிப்பாக குறைவான வசதியுடையவர்கள் மத்தியில் சிறப்பாக வேலை செய்வதாக கண்டறிந்துள்ளனர்.
 
தலைநகர் டெல்லியில் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தொடக்கப்பள்ளியில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது மோசமான கடினமான பணியாகும்.
 
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் அரசு நலத்திட்டங்களை சார்ந்துள்ளனர். பரந்த அதிகாரத்துவத்தால் நிர்வகிக்கப்படும் இந்தியாவில் இதுபோன்ற ஊக்கப்பரிசுகள் அறிவிக்கப்படுவது புதிதல்ல.
 
 
தகுதிவாய்ந்த இந்தியர்களுக்கு பெரும்பாலும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
 
ஆனால், இதுபோன்ற அறிவிப்புகளுக்கு மத்தியில் ஒரு அறிவிப்பு மட்டும் தனித்து பேசுபொருளானது.
 
நவம்பர் 23 அன்று, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரி ஒருவர், இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் மதுபானம் வழங்கப்படும் என அறிவித்தார்.
 
இதனால் மதுபானங்கள் அருந்துவது ஊக்குவிக்கப்படும் என ஆளும் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்ததையடுத்து மறுநாளே இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
 
விபரீத ஊக்கப்பரிசு
இந்த அறிவிப்பு "விபரீதமான ஊக்கப்பரிசு" என்கிறார் தொற்றுநோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹாரியா. "இது குறுகிய கால நோக்கத்தை அடையலாம், ஆனால், இதனால் திட்டமிடப்படாத விளைவுகளை ஏற்படுத்தும்," என்கிறார் அவர்.
 
ஆனால், இது சிறார் வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை அடைய முயற்சிக்கும் இந்திய அரசாங்கத்தின் முன் உள்ள சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
 
ஆரம்ப மாதங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதன் வேகத்தைக் குறைத்த விநியோகத் தடைகள் சரி செய்யப்பட்டதாகத் தெரிகிறது என, நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
 
ஆனால், இன்னும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதற்கான ஒரேயொரு காரணத்தை மட்டும் சுட்டிக்காட்டுவது கடினமானது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"தடுப்பூசி விநியோக சங்கிலியை அடைந்திருப்பதன் மூலம், அது தானாக உலகளாவிய தடுப்பூசி அணுகலுக்கான வழி என பொருள்படாது. பெரும்பாலானோர் தடுப்பூசியை செலுத்துவதற்காக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது அல்லது தங்களின் அரைநாள் ஊதியத்தை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது" என்கிறார் டாக்டர் லஹாரியா.
 
இதற்கான நுணுக்கமான பகுப்பாய்வை அரசு மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என அவர் தெரிவித்தார்.
 
 
"தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதற்கு மக்களை எது தடுத்து நிறுத்துகிறது என்பதற்கான போதுமான தரவுகள் பொதுவெளியில் இல்லை. தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள பகுதிகளை அரசு கண்டறிந்து, அதனை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் அதன் இணைக்க வேண்டும்," என தெரிவிக்கிறார்.
 
தடுப்பூசி போட தயக்கம் ஏன்?
முதல் தவணை தடுப்பூசி செலுத்தியபின், அதனால் மெத்தனமாக இருப்பதும், கொரோனா தொற்று ஏற்கெனவே ஏற்பட்டிருப்பதும், தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.
 
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 12 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், இனிதான் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என, கடந்த நவம்பர் மாதம் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை சுமார் 10,000 அல்லது அதற்கும் கீழாகவே உள்ளது.
 
தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் தயக்கமும் இதில் பங்கு வகிக்கிறது. வைரஸைவிட, தடுப்பூசி அதிக ஆபத்தானது என, தாங்கள் நினைப்பதாக இந்தியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
 
சுகாதார பொருளாதார நிபுணர் டாக்டர் ரிஜோ எம் ஜானை பொறுத்தவரையில், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், தொற்றால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள வயதுவந்தோரின் எண்ணிக்கை பெரிய கவலையாக உள்ளது.
 
கிட்டத்தட்ட 45 வயதுக்கு மேற்பட்ட 40% பேர், அதாவது சுமார் 14 கோடி பேர் ஒரு தவணை தடுப்பூசியையோ அல்லது இரு தவணை தடுப்பூசியையோ செலுத்த வேண்டியுள்ளது.
 
"அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் தடுப்பூசியை அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் மீது உள்ளது," என்கிறார் அவர்.
 
ஆனால், தடுப்பூசி செலுத்துவதற்கு ஊக்கப்பரிசுகள் உதவுமா? அதனை சொல்வது கடினமானது.
 
இத்தகைய ஊக்கப்பரிசுகளை வழங்கி, தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்கப்படுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்துள்ளன.
 
ரஷ்யாவில் தடுப்பூசி குறித்து சந்தேகிப்பவர்களை சமாதானப்படுத்த, சில நிறுவனங்கள் குலுக்கல் முறையில் ஸ்னோமொபைல்கள் மற்றும் கார்களை வழங்குவதாக அறிவித்தன.
 
ஹாங்காங்கில்,குடியிருப்புகள், தங்கக்கட்டிகள், டெஸ்லா கார்களை பரிசாக பெற வாய்ப்பிருப்பதாக அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்த விரைந்தனர்.
 
 
ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த சில உள்ளூர் அரசாங்கங்கள் பரிசு அட்டைகளையும், லாட்டரிகளையும் அறிவித்தன.
 
ஆனால், கலிஃபோர்னியா கவுண்டி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் மேற்கொண்ட ஆய்வறிக்கையின்படி, இத்தகைய ஊக்கப்பரிசுகள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகப்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை அடைவதற்கு, பணியாளர் விதிமுறைகள், அரசாங்க ஆணைகள் போன்ற இன்னும் உறுதியான கொள்கைகள் வேண்டும்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியதில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு லாட்டரி மூலம் 1 மில்லியன் டாலர்கள் வரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது, விளைவை ஏற்படுத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.
 
ஜெர்மனி ஆய்வு முடிவுகள்
ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், இதுகுறித்து நுணுக்கமான முடிவுகளை அளித்தனர். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கிடைக்காத சில சுதந்திரங்களை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கினாலோ அல்லது கணிசமான பண வெகுமதிகள் அளித்தாலோ அல்லது உள்ளூரில் உள்ள மருத்துவர்களே தடுப்பூசி செலுத்தினாலோ, தடுப்பூசி செலுத்துவதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், இத்தகைய வெகுமதிகள் மக்களின் மனப்பான்மையில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் குறைந்தளவிலேயே செயலாற்றும் எனவும், தடுப்பூசி செலுத்துவதன் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இவை நன்றாக செயலாற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறைவாக பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு, ஊக்கத்தொகையைவிட சில நன்மைகளை தாமதப்படுத்துதல் அல்லது தடுப்பூசி போடாதவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது போன்றவை ஊக்கப்பரிசுகளை விட சிறந்த தேர்வாக இருக்கலாம் என டாக்டர் ஜான் தெரிவிக்கிறார்.
 
"நீங்கள் பணச் சலுகைகளை வழங்கத்தொடங்கினால், அது முறைகேடுகளுக்கான வாய்ப்புகளை திறக்கிறது. மக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே சிறந்ததாக இருக்கும்," என தெரிவித்தார்.
 
 
போலியோ தடுப்பூசி திட்டத்தின் மூலம் இந்தியா படம் கற்றுள்ளது
 
தடுப்பூசி செலுத்தாத மக்களைக் கண்டறிந்து, அவர்கள் பார்கள், உணவகங்களுக்கு செல்வதை அனுமதிக்காதது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதை, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன.
 
கடந்த மாதம் நியூயார்க் நகரத்தில் தடுப்பூசி செலுத்தாத நகராட்சி பணியாளர்கள், ஊதியம் வழங்கப்படாத விடுப்பில் அனுப்பப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்துத் திட்டமிட்டுள்ளனர்.
 
பரிசு கொடுத்தல் அல்லது தண்டித்தல் உள்ளிட்ட முறைகள் சில பகுதிகளில் விளைவை ஏற்படுத்தும். இந்தியா அதன் கடத கால வெற்றிகளில் இருந்து குறிப்பாக போலியோ தடுப்பூசி திட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் லஹாரியா.
 
தடைகளை உடைத்தல் மற்றும் தடுப்பூசி குறித்த நம்பிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல வருட களப்பணிகளால் 2014 ஆம் ஆண்டில் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
 
"கொரோனா தடுப்பூசி திட்டத்தை நீண்டகால வெற்றியாக உறுதிப்படுத்த சமூக மட்டத்தில் சிறந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பது அவசியம்," என டாக்டர் லஹாரியா தெரிவித்தார்.