செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (18:55 IST)

ஆவி திருமணங்கள்: திடுக்கிட வைக்கும் சீன பயங்கரம்!

மனநலக் குறைபாடுடைய இரு பெண்களை கொலை செய்ததாக ஒருவரை சீனாவின் வட மேற்கு பகுதியிலுள்ள காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
 

 
இது என்ன பெரிய விடயம் என்று கேட்கிறீர்களா?
 
“ஆவி திருமணங்கள்” என்று கூறப்படும் சடங்கிற்கு அந்தப் பெண்களின் சடலங்களை விற்பதற்காக கொலைகளைச் செய்திருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமே.
 
திருமணம் செய்யாமல் இறந்து விடுவோருக்கு வாழ்க்கைத் துணையை ஏற்பாடு செய்கின்ற நோக்கத்தில், இப்போதும் சீனாவின் சில பகுதிகளில் வழக்கத்தில் இருந்து வரும் முற்கால நிழல் சடங்கு முறையை இந்த வழக்கு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
 
ஷாஅன்ஸி மாகாண காவல் துறையினரின் கூற்றுப்படி, மூன்று பேர் வந்த வாகனத்திற்குள் பெண்ணொருவரின் உடல் இருந்ததை போக்குவரத்து காவல் துறையினர் கண்டுபிடித்த ஏப்ரல் மாதமே இந்த வழக்கு தொடங்கிவிட்டது..
 
அவர்களைப் பற்றிய புலனாய்வுதான் படுபயங்கரமான தொடர் நிகழ்வுகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கத் துணைபுரிந்துள்ளது. கைதாகியிருக்கும் அந்த நபர், இறந்தவருக்கு மணப்பெண்களை பார்த்துத் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.
 
இறந்தோரின் உடலை விற்று பணம் சம்பாதிப்பதற்காக அந்த பெண்களை கொன்றுவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
ஆவி திருமணத்திலும் ஜாதகப் பொருத்தம்!
 
திருமணமாகாமல் இறந்து விடுவோர் தங்களின் உலக வாழ்க்கைக்குப் பின்னர் தனியாக இல்லை என்பதை இந்த ஆவி திருமணம் உறுதிப்படுத்துவதாக 3000 ஆண்டுகளாக இந்த வழக்கத்தை கடைபிடித்துவரும் பாரம்பரிய நம்பிக்கையாளர்கள் இதுபற்றித் தெரிவிக்கின்றனர்.
 
தொடக்கத்தில் திருமணம் செய்யாமல் இறந்துபோனோருக்காக மட்டுமே இத்தகைய ஆவி திருமணங்கள் நடைபெற்றன.
 
அதாவது, பூமியில் வாழ்கின்ற ஒருவர், திருமணமாகாமல் இறந்துபோன தனித்தனி நபர்கள் இருவருக்கு செய்து வைக்கிற சடங்காக இந்த ஆவி திருமணம் முதலில் இருந்தது.
 
ஆனால் சமீபகாலமாக, பூமியில் வாழ்கின்ற ஒருவரை, இறந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த ஆவி திருமணத்தில், `மணமகளின்' குடும்பத்தினர், மணமகளுக்கான கட்டணம் கோருவதோடு, அணிகலன், வேலைக்காரர்கள், வீடு ஆகியவற்றை உள்ளடக்கிய, வரதட்சணை வழங்கப்படுவதும் இந்த சடங்கில் உள்ளது. ஆனால் அனைத்தும் காகித வடிவத்தில்தான்.
 

 
பாரம்பரியத் திருமணங்களில் உள்ளதைப்போல, வயது, குடும்பப் பின்னணி அம்சங்களும் இந்த ஆவி திருமணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
 
அதனால், இறந்தோரை வைத்து ஜோடிகளை உருவாக்குவதற்காக, குடும்பங்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்களையும் நாடுகிறார்கள்.
 
ஆவி மணமகன் மற்றும் ஆவி மணமகளின் இறுதிச் சடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் இந்த திருமண சடங்கில் வைக்கப்படுவதோடு, விருந்தும் நடைபெறுகிறது.
 
ஆவி மணமகளின் கல்லறையில் இருந்து எலும்பைத் தோண்டி எடுத்து, ஆவி மணமகனின் கல்லறையில் வைப்பது தான் இந்த சடங்கில் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
 
சீனாவின் சில பகுதிகளில், இந்த சடங்கு முறைகள் மாற்றம் பெற்றுள்ளதற்கு பல ஆண்டுகளாக சான்றுகள் உள்ளன.
 
ரகசியமாக நடைபெறும் சடங்குகளில், உயிரோடு வாழ்கின்ற மனிதருக்கும் இறந்தவருக்கும் திருமணம் நடைபெற்ற நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
 
ஆனால், இதையொட்டி பெரிய அளவிலான மனித உடல் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறத் துவங்கியதை எச்சரிக்கின்ற பல அறிக்கைகளும் உள்ளன.
 
2015 - ஆம் ஆண்டு ஷான்ஸி மாகணத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து 14 பெண்களின் உடல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
 
2008 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஷான்ஸி மாகாணத்தில் நடைபெற்ற ஆவி திருமணங்கள் பற்றி கள ஆய்வு நடத்திய, ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் சீன மொழித்துறையின் தலைவர் ஹூயாங் ஜிங்ச்சுன் அவர்களின் கூற்றுப்படி, பெண்ணின் சடலம் அல்லது எலும்பின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
 
அவர்கள் ஆய்வு நடத்தியபோது அத்தகைய சடலங்கள், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யுவான் (3,400 முதல் 5,700 யூரோ; 4,500 முதல் 7,500 அமெரிக்க டாலர்கள்) வரை விலைபோகக் கூடியவையாக இருந்தன. இவற்றுக்கான தற்போதைய விலை ஒரு லட்சம் யுவான் வரை இருக்கலாம் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.
 
சடலங்களை விற்பது 2006 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லறையிலிருந்து சடலங்களை திருடிச் செல்வோரை இந்த சட்டம் தடுத்துவிடவில்லை என்றே கூறலாம்.
 
ஆவி மணமகளை தேடிக் கொண்டிருந்த குடும்பத்திற்கு, உடலை வழங்கி, விற்று பணம் சம்பாதிப்பதற்காக ஒரு பெண்ணை கொன்றுவிட்டதாக உள்மங்கோலியாவின் லியாங்ச்செங் வட்டத்தில் கடந்த ஆண்டு கைதான ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
 
இது நடைபெறுவதற்கான காரணம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
ஷான்ஸி போன்ற சமீபத்திய கொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் சீனாவின் சில மாவட்டங்களில், சுரங்க அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிக திருமணமாகாத இளைஞர்கள் உள்ளனர்.
 

 
இத்தகைய பணியில் ஈடுபடுகின்ற போது உயிரிழப்புகள் அதிகமாக நடைபெறும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது.
 
குடும்பத்தின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிப்பதற்கு உழைக்கின்றபோது இறந்துவிட்ட மகனுக்கு, இறந்த ஒரு மணமகளை கண்டுபிடிப்பது அவர்களால் செய்யக்கூடிய நல்ல காரியமாக பார்க்கப்படுகிறது.
 
இறந்த உறவினருக்கு காட்டும் நேசத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஈடு செய்கின்ற வடிவமாக இந்த ஆவி திருமணம் பங்காற்றுகிறது.
 
ஆனால், ஆண் - பெண் பாலின சமச்சீரின்மை விகிதமும் இதில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 100 பெண்களுக்கு 115.9 ஆண்கள் பிறப்பதாக 2014 - ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.
 
ஆனால், இதற்கு முக்கியமான கலாசார காரணங்களும் உள்ளதாக டாக்டர் ஹூயாங் நம்புகிறார்.
 
பல நாடுகளில் உள்ளதைப் போல, இறந்தோரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், தங்களுக்கு ஆபத்து அல்லது பாதிப்பு வரும் என்று சீன மக்களும் நம்புகின்றனர். ஆவிக்கு திருமணம் செய்து வைப்பது, இறந்தோரின் ஆன்மாக்களை சாந்தியடையச் செய்வதற்காக என்று கருதப்படுகிறது.
 
“இறந்தவர்கள், உலக வாழ்க்கைக்கு பின்னரும் தொடர்ந்து வாழ்கின்றனர் என்பது தான் இந்த ஆவி திருமணத்திற்கு பின்னால் இருக்கின்ற அடிப்படை தத்துவம். எனவே, யாராவது ஒருவர் வாழ்கின்றபோது திருமணம் புரியாவிட்டால், இறப்புக்கு பின்னர் திருமணம் செய்து கொள்வது அவசியமாகிறது” என்று டாக்டர் ஹூயாங் தெரிவித்துள்ளார்.
 
பாதையில் சோதிக்கும் தலைமுடி, கைவிரல் நகம்!
 
இதுபோன்ற பெரும்பான்மை நிகழ்வுகள் சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதாவது, ஷான்ஸி, ஷாஅன்ஸி மற்றும் ஹூனான் மாகாணங்கள் போன்ற பகுதிகளில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆனால், ஹாங்காங்கிலுள்ள ஜோதிடர் ஸெட்டோ ஃபாத்-ச்சிங் என்பவர் இந்த ஆவி திருமண வழக்கத்தின் முற்கால வடிவமானது ஆசியாவின் தென் கிழக்கிலுள்ள சீன சமூகங்களிடம் இன்னும் இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்.
 
தைவானில் திருமணமாகாத பெண் இறந்துவிட்டால், அவளுடைய குடும்பத்தினர் இறந்தவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுகின்றனர்.
 
பணம், காகிதப் பணம், ஒரு தலைமுடி முடிப்பு, ஒரு கைவிரல் நகம் ஆகியவற்றோடு சிவப்பு நிற பைகளை பாதைகளில் வைத்துவிட்டு அவற்றை எடுக்கின்ற ஆண் யார்? என்பதை ஒளிந்திருந்து பார்ப்பார்கள்.
 
அந்த பைகளை முதலாவதாக எடுக்கின்ற ஆண் மகன், மணமகனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், அந்த ஆவி மணமகளை அந்த ஆண் மகன் திருமணம் செய்ய மறுத்துவிட்டால், அது துரதிர்ஷ்டமாகப் பார்க்கப்படுகிறது.
 
ஆவி திருமணங்களின் திருமணச் சடங்கு முறைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை. சீனப் பெருநிலப் பகுதியை தவிர வேறு எங்கும் எலும்புகள் தோண்டி எடுக்கப்படுவதில்லை.
 
ஆவியை திருமணம் செய்துகொள்கின்ற மணமகன், பின்னர் பூமியில் வாழ்கின்ற பெண்ணொருவரை திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், ஆவி திருமணத்தின் மனைவியை தான் முதல் மனைவியாக வைத்து வணங்க வேண்டும்.
 
தைவானின் தாய்ச்சுயுங் என்ற பகுதியில் நிகழ்ந்த பிரமாண்டமான சடங்கு ஒன்றில், இறந்துபோன தன்னுடைய காதலியை ஒருவர் திருமணம் செய்து கொண்ட காணொளி பதிவு கடந்த ஆண்டு மிகவும் வைரலாக இணையதளத்தில் பிரபலமானது.
 
ஒருவர் இறந்தபிறகு, அந்த இழப்புக்களை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் நடைபெறும் உலக அளவிலான குழப்பங்களில் இந்த சடங்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
 
“இத்தகைய ஆவி திருமணங்கள் இறந்தவர் மீதான மாறாத அன்பை வெளிக்காட்டி, மனதை நெகிழ வைப்பவை” என்று ஸெட்டோ ஃபாத்-ச்சிங் பிபிசியிடம் கூறியுள்ளார்.