வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (10:24 IST)

முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர்  நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பைடனுக்கு புதின் வாழ்த்துகள் தெரிவித்தாக ரஷ்ய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
 
ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டிப்பான உறவை கொண்டிருக்கவில்லை என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி  வந்தனர்.
 
அதேபோன்று, பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தில் துணை அதிபராக பைடன் செயல்பட்டபோதும், ரஷ்யா உடனான உறவு பலவீனமாக இருந்ததாகவும்,  இதனால் ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டது, கிழக்கு உக்ரைன் ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் சிரியாவில் கால்பதித்தது உள்ளிட்ட சம்பவங்களில் அமெரிக்கா  பின்னடைவை சந்தித்ததாகவும் விமர்சனம் இருந்து வந்தது.
 
இருநாட்டு தலைவர்கள் பேசியது என்ன?
 
"எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை அதிபர் பைடன் தெளிவுபடுத்தினார்" என்று அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுமட்டுமின்றி ரஷ்யா மீது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் இணையவழி தாக்குதல் குறித்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு  எதிரான செயல்பாடு குறித்தும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்தும் பேசப்பட்டதாக அமெரிக்க தரப்பு  தெரிவித்துள்ளது.
 
ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை  மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.
 
"ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர்" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
"ஒட்டுமொத்தமாக, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களுக்கிடையேயான உரையாடல் வெளிப்படையாக இருந்தது" என்று கிரெம்ளின் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த உரையாடலின்போது அமெரிக்க - ரஷ்ய அணு ஆயுத போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒபாமா கால ஒப்பந்தமான  'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
 
அடுத்த மாதம் நிறைவுற உள்ள இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடுவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.