வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 20 ஜூன் 2022 (14:01 IST)

இருளர் பழங்குடிக்கு இலவசமாக பரதம் கற்றுத் தரும் அமெரிக்க பெண் பேராசிரியர்

Dark Tribe
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ பாரம்பர்ய நடனத்தை பழங்குடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை அமெரிக்காவில் இருந்து வந்து செயல்படுத்தி வருகிறார் நாட்டியக் கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் தாய் தமிழ்ப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் பயிலும் இருளர் சமூக மாணவிகளுக்கு இந்த பரத நாட்டிய வகுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை பழங்குடி தாளத்துக்கு ஆடிக்கொண்டிருந்த குழந்தைகள், இங்கு பரத ஜதிக்கு ஆடுகிறார்கள்.

"சமூகத்தின் பின்தங்கிய இடத்தில் இருக்கும் இந்த மக்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இப்படியே இருப்பார்கள். அவர்களும் படிக்க வேண்டும் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சொல்லிக் கொடுக்க நாம் முனைந்தால் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். பத்து பேரில் இரண்டு பேர் இதைக் கற்றுக்கொண்டு முன்னேறினால் அதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்" என்று பெருமிதம் பொங்க நம்மோடு பேசினார் கௌசல்யா சீனிவாசன்.

கௌசல்யா ஸ்ரீனிவாசன், அமெரிக்காவில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில், நாடகம் மற்றும் கலை துறையில் வருகைதரு பேராசிரியர். மேலும் அமெரிக்க அரசு வழங்கும் 'ஃபுல்பிரைட் ஃபெல்லோஷிப்' பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு‌ நாடுகளில் கடந்த 15 ஆண்டுகளாக பரத நாட்டியத்தைக் கற்பித்து வந்துள்ளார். அமெரிக்காவில் சட்டம்‌ பயின்று பன்னாட்டு நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகப் பணிபுரியும் இவரது மகள் ஸ்ருதி தனது தாயாரின் முயற்சிக்கு உதவும் விதமாக தன்னுடைய பங்களிப்பையும் பழங்குடி இருளர் குழந்தைகள் பரதம் கற்பிப்பதில் செலுத்தி வருகிறார்.

கலை எல்லோருக்குமானது

"ஒரு பரதக்கலைஞராக, மாணவியாக, ஆசிரியராக என எல்லா பரிமாணங்களும் எனக்குள் உண்டு."

"நான் அமெரிக்காவில் உள்ள கென்னடி சென்டரில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு, Art for all என்றொரு முறை உண்டு. அதன்படி, அந்தந்த நாளில் என்ன கலை நிகழ்ச்சி நடக்கிறதோ அதை எந்த விதமான கட்டணமுமின்றி அனைவரும் காணலாம்.

`கட்டணம் ஏதுமில்லை - கலையைப் பார்க்கலாம்` என்ற இந்த முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது போல நம் நாட்டிலும் இருந்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்தேன். அந்த நேரத்தில்தான் நீதிபதி சந்துருவை சந்தித்து இந்த விருப்பத்தை தெரிவித்தேன். அவர்தான், இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துத் தந்தார் என்று தெரிவிக்கும் கௌசல்யா, இந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதுதான் இத்தனை ஆண்டுகால வாழ்வில் பெரும் சாதனை என்று தோன்றுவதாகவும் பெருமிதம் கொள்கிறார்.

அத்துடன், "இவரது மகளும் வழக்கறிஞருமான சுருதி ஸ்ரீனிவாசன்.உட்பட இவரது முன்னாள் மாணவர்கள் பலரும் இதற்கு உதவவும் செய்கிறார்கள் என்று விவரித்தார்.

அமெரிக்காவில் கென்னடி சென்டரில் கருக்கொண்ட இந்த திட்டம், இந்தியாவில் ஒரு காய்கறிக் கடையிலிருந்து செயல்வடிவம் பெறத் தொடங்கியது என்பதுதான் இதில் அடுத்த சுவாரசியம்.

இதுகுறித்து பிபிசி தமிழுடன் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நீதிபதி சந்துரு, காய்கறிக் கடையிலிருந்து தொடங்குகிறார். "ஒருநாள் தெருவோர கடையொன்றில் கறிகாய் வாங்கும் போது திருமதி கெளசல்யாவை சந்தித்தேன். ஜெய்பீம் படம் பார்த்திருந்த அவர் அப்படத்தைப் பற்றி சிலாகித்துப் பேச, அந்த மக்களுக்குத் தான் ஏதேனும் செய்யவேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

தனக்குத் தெரிந்த பரதக்கலையை அவர்களுக்கு கற்றுத்தர உதவிசெய்யும் படி கேட்டுக்கொண்டார். நான் உடனே இருளர் சமூக விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பேராசிரியர் கல்யாணியைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறினேன். அவரும் உடனே தக்க உதவி செய்ய முன்வந்தார். அப்படித்தான் எங்கள் தொடர்பு தொடர்ந்தது."

புரட்சி உண்டாகிவிடாது. ஆனால்...

பாரம்பர்ய கலைகள் கடந்த நூற்றாண்டில் கைமாறிவிட்டன. அவை நகர மக்கள் பார்த்து ரசிக்கும் வகையிலான வடிவமாய் மாற்றம் செய்யப்பட்டும் விட்டன. இந்த மக்கள் பரதம் கற்றுக்கொள்வதால் பெரும் புரட்சி ஒன்றும் உண்டாகிவிடாது. ஆனால் எந்தக் கலையும் எந்தவொரு குழுவுக்கும் சொந்தமாகிவிடாது.

பரதமும் ஒரு பாரம்பர்ய கலை என்பதால் அதை அனைவரும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், பெருவாரியான மக்கள் இதிலிருந்து விலகியே வாழ்ந்து வருகிறார்கள். அந்தத் தடைகளை உடைப்பதே இம்முயற்சி.

ஆனால், இருளர் மக்களின் முன்னேற்றத்துக்கு இது எந்த விதத்தில் உதவிகரமாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ""இருளர் சிறுமியர்களுக்கு ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும். குறிப்பாக எந்தக் கலையையும் தங்களால் வசப்படுத்தமுடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படுவதோடு எதிர்காலத்தில் பரதத்தின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்து தற்கால சமூக நீதி/அநீதி ஆகியவற்றை அந்தக் கலையின் மூலம் விளக்க இந்தக் குழந்தைகள் பயன்படுத்தலாம்.

இப்பொழுதே நந்தனார் சரித்திரம் நாட்டிய வடிவில் உள்ளது. பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்களுக்கு நடன வடிவமுண்டு. எக்கலையும் எங்களால் வசப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதே இம்முயற்சியின் ஆதாரநோக்கம் என்கிறார் நீதிபதி சந்துரு.

பழங்குடி குழந்தைகளுக்கு இலவசமாக பரதம் கற்றுத் தருவதால், இதுவரை டிவி பார்த்து பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த குழந்தைகள் தற்போது பரத நாட்டியம் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்கின்றனர் பெற்றோர்.

இந்த வகுப்புகளில் பரதம் கற்றுக்கொள்ளும் மாணவிகளுள் விழுப்புரத்தைச் சேர்ந்த ரெஜினாவின் மகள் கௌசல்யாவும் ஒருவர். இதுகுறித்து ரெஜினா பேசும்போது, "எங்களுக்கெல்லாம் பரதநாட்டியம் என்றால் என்னவென்றே தெரியாது. குழந்தைகள் வீட்டில் டிவி போட்டு பாட்டுக்கு ஆடுவாங்க. இப்போது, பள்ளிக்கூடத்திலேயே இலவசமாக பரதம் கத்துக்கொடுக்கிறாங்கன்னு வந்து சொன்னாங்க. 2 நாள் வகுப்புக்குப் போன பிறகு என் குழந்தை இது ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க," என்றார்.

இதுகுறித்துப் பேசிய கௌசல்யா, "வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று சொல்லிக்கொடுத்து என்ன பலன். தமிழ்நாட்டில் நம் குழந்தைகளுக்கு கலையை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களும் கலையின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்," என்று கூறினார் கௌசல்யா.