1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

இடுப்பை சுற்றியுள்ள சதையினை குறைக்க வக்ராசனம்

முதுகுத்தண்டின் அசைவுகளை இலகுவாக்குவதற்கு மிகவும் சிறந்தது. கழுத்து இறுக்கம், முதுகு பிடிப்பு ஆகியவைகள் சரியாகும். வயிறு மற்றும் இடுப்பு  சதைகளின் குறைபாடுகள் நீக்கப்பெறும். அடிவயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்கி இரத்த ஓட்டம் சுரப்பிகளுக்கு சென்று சீராக இயங்க வைக்கின்றது.
கால்களை நீட்டி, முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுங்கள். கைகளைத் தொடைக்குப் பக்கத்தில், உடலுக்குப் பக்கவாட்டில்  வைத்துக்கொள்ளவேண்டும். கைவிரல்கள் முன்பக்கம் பார்த்து இருக்கவேண்டும். கைகள் லேசாக தரையைத் தொட்டுக்கொண்டிருக்கவேண்டும்.
 
துவக்க நிலையிலிருந்து வலக் காலை மடக்கி, வலக் கால் பாதம், இடக் காலின் மூட்டுக்குப் பக்கத்தில் தரையில் பதிந்திருக்கும்படி வைக்கவேண்டும். வலக்  கையை பின்னால் கொண்டுவந்து, வலக் கை விரல்கள் வெளிப்புறம் பார்த்து அதாவது முதுகுக்கு எதிர்ப்புறமாக இருக்கும்படி திருப்பி, முதுகுக்கு அண்டை  கொடுத்தபடி வைத்துக் கொள்ளவும்.
 
இடக்கையை மெல்ல முன்னெடுத்து வந்து வலக்காலின் (மடக்கி வைத்திருக்கும் கால்) கட்டை விரலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். (வலக் காலின்  இடப்பக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்) வயிற்றை உள்ளிழுத்தபடி இடுப்பு, முதுகு, தலை மூன்றையும் ஒருசேர வலப்புறமாகத் திருப்பவும்.
 
இப்போது நம் பார்வை வலப் புறத் தோள்மீது இருக்கும். இதுவே வக்ராசனம். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.  இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
 
குடல்வாயு (ஹெர்னியா நோய்) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. முதுகு, கழுத்து வலி இருக்கும்போது இந்த யோகாசனத்தை செய்வதாகாது. கழுத்தெலும்பு அழற்சி உள்ளபோது செய்யக்கூடாது.
பலன்கள்:
 
வக்ராசனம் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த ஆசனத்தைச் செய்வதால் கழுத்து வலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
 
கண்பார்வை அதிகரிக்கும்.  மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல் மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி, உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச் சுற்றியுள்ள சதையினைக்  குறைக்கிறது.