புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

சலபாசனம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.

வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.
 
“சலப” என்றால் வெட்டுக்கிளி என்று பொருள். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளி போன்று தோற்றம் அளிப்பதால் சலபாசனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
முதலில் அத்வாசனம் செய்ய வேண்டும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் நேராக நீட்டி  வைத்து, பிறகு இடுப்பை தூக்கி இரண்டு கைகளையும் உடலுக்கு அடியில் வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். கைவிரல்களை மடக்கியோ,  நீட்டியோ வைக்கவும்.
 
மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி, கைகளை அழுத்தி இரண்டு கால்களையும் இணைத்தவாறு மேலே 45 டிகிரி அளவு வரை உயர்த்தி நிறுத்த வேண்டும்.  தொப்புளுக்கு கீழே இருந்து பாதம் வரைக்கும் உள்ள உடல் பகுதி அந்தரத்தில் இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கக் கூடாது. இந்த ஆசன நிலையில் 10  முதல் 30 வினாடி இருந்து பிறகு, நிதானமாக கால்களை கீழே இறக்கவும். மூச்சை வெளியே விடவும். கால்கள் தரையில் படியும் வரைக்கும் முழங்காலை மடக்கக்  கூடாது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.
 
பயன்கள்: 
 
ஜீரண கருவிகள் நன்கு செயல்படும். இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, மூத்திரம் கழிப்பதில்  சிரமம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது.
 
வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.
 
குறிப்பு: இருதய பலஹீனம், உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.