கிம் - டிரம்ப் சந்திப்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு முன்னோடியாக இருக்குமா?
உலக நாடுகள் பெரிதும் எதிர்ப்பார்த்த டிரம்ப் - கிம் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடந்தது. இந்த சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், டிரம்ப்பின் அழைப்பை ஏற்று கிம் அமெரிக்கா செல்ல உள்ளதாவும் தெரிகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பி ஷாபாஸ் ஷரிப் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, பரம எதிரிகளாக இருந்து வந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, வடகொரியா அமெரிக்காவின் அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் மற்றும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால், இவரது தம்பி கட்சி தலைவர் பதவியை ஏற்றுள்ளதுடன் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.