தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நெருக்கடிக்கும், அதிகரித்து வரும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா??
இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி சுலேமானீயை கொன்றதிலிருந்து தங்கம் விலை கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவில், 1600அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது.
இந்தியாவில் 2 சதவீதம் அளவிற்கு விலையுயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை 41,290ஆக உள்ளது. இந்த விலையேற்றம், சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்தியாவில் தங்கம் கலாசார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தங்கம் விலை என்பது கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது.
"இங்கு தங்கம் என்பது வைத்துக் கொள்வதற்கான பாதுகாப்பான ஒன்றாகவும், பழம்பெரும் முதலீடாகவும் உள்ளது." என்கிறார் கேடிஎன் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் ஷர்மா.
தங்கத்தின் விலை அதிகரிப்பால் இதன் தேவை மீது பாதிப்பு ஏற்படலாம் என்றும், ஆனால் அது குறித்த கால அளவே இருக்கும் என்று தங்கம் தொடர்பான வணிகர்கள் கூறுகின்றனர். டெல்லியில் 40 ஆண்டுகளாக தங்க நகை வணிகத்தில் ஈடுபட்டுவரும் விஜேந்தர் வர்மா, இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதும் குறையாத ஒன்றாகவே உள்ளது என்கிறார்.
''தற்காலிகமாக தங்கத்தின் தேவை சற்று பாதிக்கப்படலாம். ஆனால் இங்கு கலாச்சார மற்றும் மத ரீதியிலான விழாக்களில் தங்கம் மிக அவசியம் என்பதால் தேவைப்படுவோர் அதை வாங்கத்தான் செய்வர்'' என்று வர்மா குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் திருமண காலமாக கருதப்படுவதால், இந்த காலத்தில் தங்கத்தின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். ஏனெனில் இக்காலக்கட்டத்தில் இரு மண வீட்டார் குடும்பங்களிலும் தங்கம் பரிசளிக்கப்படுவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த வணிகத்தில் ஈடுபட்டு வரும் மற்ற வணிகர்களும் இது போன்ற கருத்தையே வெளியிட்டனர்.
''தங்க சுரங்கங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், இது விலைமதிப்பில்லாத மற்றும் தேவை அதிகம் உள்ள பொருளாக இருந்து வருகிறது. பரிமாற்றத்திலும், கையிருப்பில் இது பாதுகாப்பான பொருளாக இருந்துவருகிறது'' என்று ராகுல்ஷர்மா என்ற தங்க நகை வணிகர் தெரிவித்தார்.
இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் தான் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது.
ஆனால் கலாசார தேவைகளை தாண்டி, இந்தியாவில் தற்போதைய பொருளாதார சூழலில், நுகர்வோரிடம் போதுமான அளவு பணப்புழக்கம் நிலவ செய்ய அரசு தடுமாறி வருகிறது.
நாட்டில் ஒவ்வொரு முக்கிய துறையும் இந்த பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார் மற்றும் வீடுகள் போன்ற முதலீடுகளை தற்போது மேற்கொள்ள நாட்டில் தயக்கம் காணப்படுகிறது.
வாங்கும் மக்களின் முடிவுகளை பெரிதும் பாதிக்கும் பொருளாதார மந்தநிலையால், 2019-ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் தங்கத்தின் தேவை 32 சதவீதம் வீழ்ந்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சற்று இறக்கம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமையன்று இராக்கில் உங்கள் தங்களின் படைகள் மீது இரான் தாக்குதல் நடத்தியதில் எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்ததையடுத்து சர்வதேச அளவில் விலை குறைந்தது. தற்போது அமைதி நிலவுவதால் இந்தியாவில் இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. ஆனால் இது புயலுக்கு முன்னான அமைதியாக இருக்கலாம். அடுத்த சில வாரங்களில் தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வுகள் தொடரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.