ஆன்லைன் படிப்பிற்கு விசா எதற்கு..!? – முட்டுக்கட்டை போட்ட அமெரிக்கா!
கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்க பல்கலைகழகங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு செல்ல தொடங்கியுள்ள நிலையில் ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாக பாடம் நடத்த பல்கலைகழகங்கள் திட்டமிட்டுள்ளன. சில பல்கலைகழகங்கள் இதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைகழகங்களில் படிக்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக படிக்க மாணவர்கள் அமெரிக்கா வர வேண்டிய அவசியம் இல்லை என்பதால் புதிய சேர்க்கை மாணவர்களுக்கான விசாவை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வரும் நிலையில் அவர்கள் படிக்கும் பல்கலைகழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினால் அவர்களுக்கும் விசா ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒன்று மாணவர்கள் ஆன்லைன் அல்லாத பல்கலைகழக பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிர்பந்தம் எழுந்துள்ளது. இதற்காக அளிக்கப்பட்டுள்ள காலத்திற்குள்ளாக மாணவர்கள் வெளியேறாத பட்சத்தில் குடியுரிமை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது அமெரிக்க படிப்பை கனவாக கண்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.