செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (23:36 IST)

சீனா டெலிகாம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த அமெரிக்கா - 'தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து'

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை "தேசிய பாதுகாப்பு" குறித்த காரணங்களால் அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
 
'சீனா டெலிகாம்' என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும்.
 
அந்த நிறுவனத்தின் மீது சீன அரசு செலுத்திய ஆதிக்கம், அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு சேமிக்க, இடைமறிக்க, திசை திருப்ப உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்க்கும் சதி மற்றும் பிற தீங்கான நடவடிக்கைகளுக்கு வித்திடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வந்த அந்த நிறுவனம் அமெரிக்காவின் இந்த முடிவு `ஏமாற்றமளிப்பதாக` தெரிவித்துள்ளது.
 
"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையளிக்கும் அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்," என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சீனா டெலிகாம் நிறுவனம் சீனாவின் தொலைத்தொடர்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மூன்று நிறுவனங்களில் ஒன்று.
 
110 நாடுகளில் இந்த நிறுவனம் அலைபேசிக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை முதல் லேண்ட்லைன் தொலைபேசி சேவை வரை வழங்குகிறது. பல லட்சம் பேர் இந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்றனர்.
 
அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லன், சீனாவின் துணைப் பிரதமர் லியூவுடன் சர்வதேச பொருளாதாரம் குறித்து பேசிய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இரு நாடுகளும் சமீபமாக தைவான் மற்றும் வர்த்தம் தொடர்பாக காட்டமான கருத்துகளை பகிர்ந்து வந்த நிலையில், அமெரிக்கா - சீனா இடையேயான உறவு முன்னேற்றம் அடைவதற்கான ஒரு முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்பட்டது.
 
அமெரிக்காவின் மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா டெலிகாம் நிறுவனத்தின் மீது சீன அரசு ஆதிக்கம் செலுத்தி, கட்டுப்படுத்துவதால் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்யப்போவதாக எச்சரித்திருந்தது.
 
அந்த நிறுவனம் சுயாதீனமாக செயல்படுவதற்கு மாற்றாக சீன அரசின் கோரிக்கையின் பேரில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
 
தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தால் சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது அமெரிக்கா எடுக்கும் சமீபத்திய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
 
கடந்த வருடம் அமெரிக்க மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் ஹுவாய் மற்றும் சிடீஇ (ZTE) ஆகிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இந்த நிறுவனங்களிலிடமிருந்து உபகரணங்கள் வாங்குவது சிரமமானது.
 
அதேபோன்று 2019ஆம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் சீனா மொபைல் நிறுவனத்தின் அமெரிக்க உரிமத்தை ரத்து செய்தது. மேலும் சீன யூனிகாம் அமெரிக்காஸ் மற்றும் பசிஃபிக் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.
 
இந்த அனைத்து சம்பவங்களிலும், இந்த நிறுவனங்களை பயன்படுத்தி அமெரிக்கா மீது சீனா உளவு பார்க்கலாம் அல்லது தேசிய நலனுக்கு பாதகம் விளைவிக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.