வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (21:13 IST)

தூக்கியெறியும் சிகரெட் துண்டுகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுக்கும்

சிகரெட் துண்டுகளால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும் என்று சமீபத்தில் வெளிவந்த ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டனிலுள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், சிகரெட் துண்டுகள் காணப்பட்ட மண்ணில் வளரும் க்ளோவர் தாவரத்தின் முளைப்பு வெற்றி வீதம் மற்றும் வளர்ச்சி முறையே 27 மற்றும் 28 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
 
புல்லை எடுத்துக்கொண்டோமானால், அதன் முளைப்பு வெற்றி வீதம் மற்றும் வளர்ச்சியில் முறையே 10 மற்றும் 13 சதவீதம் சிகரெட் துண்டினால் பாதிப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகள் தூக்கியெறியப்படுவதாகவும், அவை பூமியின் மிகவும் பரவலான பிளாஸ்டிக் மாசுபாடாக அமைவதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 
பெரும்பாலான சிகரெட் துண்டுகளில் செல்லுலோஸ் அசிடேட் ஃபைபரால் ஆன ஒரு வடிகட்டி போன்ற பகுதி உள்ளது, இது ஒரு வகை உயிர்ம-பிளாஸ்டிக்.
 
பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் சிகரெட் துண்டுகள் ஏற்படுத்தும் அதே அளவு பாதிப்பை புகைக்கப்படாத சிகரெட் துண்டுகளும் தாவரங்களுக்கு ஏற்படுத்துவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 
'எக்கோடாக்ஸிகாலிஜி அண்ட் என்விரான்மென்டல் சேப்டி' எனும் சஞ்சிகையில் இதுதொடர்பான ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்துள்ளது.
 
இந்த ஆய்வுக்கான மாதிரிகள் பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் நகரத்தை சுற்றிய பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
'சுற்றுச்சூழலுக்கு பெருந்தீங்கு'
 
புகைப்பிடித்தவுடன் சிகரெட் துண்டுகளை கீழே போடுவது என்பது சமூகத்தில் வேண்டுமானால் சாதாரணமான செயலாக கருதக் கூடிய சூழ்நிலை நிலவலாம். ஆனால், அது நீண்டகால அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு பெருந்தீங்கை விளைவிக்கக் கூடியது என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டேனிலி க்ரீன்.
 
"உலகம் முழுவதும் தெருக்களிலும், பூங்காக்களிலும் இயல்பாக காணப்படும் சிகரெட் துண்டுகள் விளைவிக்கும் தீங்கை வெளிக்கொணரும் முதல் ஆராய்ச்சி இதுதான்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
"சிகரெட் துண்டுகள் காணப்படும் பகுதியிலுள்ள தாவரங்களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுவதை எங்களது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளோம். கால்நடைகளுக்கு தீவனமாக விளங்கும் புல் வகைகளே இதில் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த தாவரங்கள் நகரப் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்லுயிர் வளத்தை அளிப்பதுடன், மகரந்தச் சேர்க்கை மற்றும் நைட்ரஜன் பராமரிப்புக்கு சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமானது. ஆனால், மண்ணில் நிலைப்பெறும் இந்த சிகரெட் துண்டுகள் ஏற்படுத்தும் தீங்கு குறைய பல தசாப்தங்கள் ஆகலாம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.