திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (15:21 IST)

மார்ச் 10 வரைதான் காலக்கெடு.. இந்திய ராணுவத்திற்கு மாலத்தீவு அதிபர் எச்சரிக்கை?

Maldives President
மாலத்தீவு – இந்தியா இடையே உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற சொல்லி மாலத்தீவு அதிபர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.இந்தியாவின் அண்டை தீவு நாடான மாலத்தீவு சமீபமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி லட்சத்தீவுகள் சென்று வந்ததை மாலத்தீவு அரசியல்வாதிகள் விமர்சித்தது பிரச்சினையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்திய மக்களிடையே மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சு வைரலானது. இதனால் மாலத்தீவின் சுற்றுலாவும் பாதிக்கப்பட்டது.

இந்தியாவுடன் நல்லிணக்கத்தோடு இருந்த மாலத்தீவுக்கு இந்திய அரசு ராணுவ உதவி, தீவுகளுக்கு இடையேயான விமான சேவை உதவிகளையும் வழங்கியிருந்தது. ஆனால் சமீபமாக சீனாவுடன் நட்பு பாராட்டும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுடனான உறவை முறிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்.


தற்போது மாலத்தீவில் ராணுவ உடை மற்றும் மஃப்டியில் உள்ள ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என அவர் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் சீனாவின் இலவச ராணுவ உதவிகளை பெறும் ஒப்பந்தத்தில் மாலத்தீவு கையெழுத்திட்டது.

அதை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ள முகமது முய்சு “மே 10 ஆம் தேதி நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது. சீருடையில் இல்லை, சிவில் உடையில் இல்லை. இந்திய ராணுவம் எந்த வகையிலும் ஆடை அணிந்து இந்த நாட்டில் வசிக்காது. இதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்” என்று பேசியுள்ளார். மாலத்தீவு அதிபரின் இந்திய வெறுப்பு போக்கு இருநாடுகள் இடையேயான அரசியல் உறவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K