இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்"
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன்.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், நாடு எதிர்காலத்தில் எவ்வாறான சவால்கள் மற்றும் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்கிறது.
இந்த நிலையில், பொருளாதார நிபுணரும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்க்காணல்.
விளம்பரம்
கேள்வி: இலங்கை ரூபா அதன் மதிப்பை இழக்குமா? இலங்கை மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளுமா?
பதில்: மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம். ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது.
கேள்வி: அப்படி மற்றுமொரு நாணயத்திற்குச் சென்றால், இலங்கை யாருடன் இணையும்?
பதில்: இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவுடன் தான் இலங்கை சேர வேண்டும். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் முதல் பேச்சுவார்த்தை
பதில்: கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, இலங்கைக்குள் உதவிகள் வராது. வங்கித் துறை வங்குரோத்து அடையலாம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக ஸ்தம்பித்து, நாடு முழு வங்குரோத்து நிலைக்கு அல்லது பொருளாதார மந்த நிலைக்குச் செல்லலாம்.
கேள்வி: இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், நாடு மீள வழமை நிலைக்கு வர அது உதவுமா?
பதில்: சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், இலங்கை எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்னையிலிருந்து ஓரளவு மீள முடியும். அது முழுமையாக மீள முடியாது. கடனை விட நாட்டிற்கு மானிய அடிப்படையில் பாரிய அளவிலான உதவிகள் கிடைக்கும் போதே நாடு மீள முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றால், அந்த கடனைச் செலுத்த முடியாது, திரும்பத் திரும்ப சிக்கலில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே மேலை நாடுகளிடமிருந்து நிதி உதவிகள் மூலம் அல்லது மானிய அடிப்படையிலான உதவிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்னையிலிருந்து விடுப்படக் கூடிய வாய்ப்பு இருக்கும்.
பால்மாவுக்கான வரிசை.
கேள்வி: இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு கடன் வழங்கும்பட்சத்தில், அது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவியாக இருக்குமா?
பதில்: ஓரளவு இருக்கும். பெருமளவு என்று சொல்ல முடியாது. இந்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனை வழங்கும் போது, அது பல்வேறு நிபந்தனைகளை விடுத்தே கடனை வழங்கும். சீனாவும் இந்தியாவும் கடன் வழங்கும் போது, இலங்கை மேலும் இக்கட்டான நிலைக்குத்தான் போகும். சீனாவும் இந்தியாவும் முரண்பட்ட துருவங்கள். முரண்பட்ட துருவங்களிடமிருந்து கடனை வாங்கும் போது இந்தியா விதிக்கின்ற நிபந்தனைகளையும் சீனா விதிக்கின்ற நிபந்தனைகளையும் நிறைவேற்றும் போது இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார குழிக்குத் தள்ளப்படும். மீளவே முடியாத நிலைமை ஏற்படும். இது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பனிப் போருக்கான களமாக மாற்றப்படும். ''இலங்கை குரங்கு கையில் அகப்பட்ட அப்பத்தை" போன்று இறுதியில் இருக்கும்.
கேள்வி: இலங்கை பிரச்சினைகள் முடிவடைய வேண்டும் என்றால், தற்போது இருக்கின்ற அரசாங்கம் பதவி விலக வேண்டுமா?
பதில்: இந்த அரசாங்கம் பதவி விலகுவது சரிவராது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும். ஏனென்றால், இலங்கையின் அதிகாரங்கள் தீர்மானம் எடுக்கும் சக்தி நாடாளுமன்றத்தை விடவும் ஜனாதிபதிக்கே அதிகம் இருக்கின்றது. அரசாங்கம் பதவி விலகி ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே ஜனாதிபதி பதவி விலகி வேறு ஒருவருக்கு பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அல்லது புதிய தேர்தலுக்குப் போக வேண்டும். அல்லது செய்யக்கூடிய ஆளுமை உள்ள மேலை நாடுகளின் செல்வாக்கு, மேலை நாடுகளின் அங்கீகாரம், மேலை நாடுகளின் பங்களிப்பு ஆகிய செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இந்த நாடு கையளிக்கப்பட வேண்டும். அப்படியாக இருந்தால் மாத்திரமே இலங்கை மீண்டெழ முடியும். அப்படி இல்லையென்றால், இலங்கைக்கு எந்த வித முன்னேற்றமும் வராது.