செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (09:00 IST)

’எங்க ”பவர்” தெரியாம செய்றீங்க..!’ உக்ரைனை இருளில் மூழ்கடித்த ரஷ்யா!

சமீபத்தில் ரஷ்ய எல்லையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பின் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையத்தை தாக்கியுள்ளது ரஷ்யா.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அதை அதிகாரப்பூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துள்ளது.

இதனால் ரஷ்ய எல்லைகளை உக்ரைனும் தாக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் – ரஷ்ய எல்லையில் உள்ள ரஷ்யாவின் பிராந்தியமான பெல்கோராட் நகரம் மீது தாக்குதலை நடத்தியது உக்ரைன். இதில் அந்நகரில் உள்ள துணை மின்நிலையம் தீப்பற்றியது. இதனால் அந்நகரில் மின்வெட்டு ஏற்பட்டது.


இந்நிலையில் தற்போது இதற்கு பதிலடியாக உக்ரைன் தலைநகர் கீவிற்கு மின் சப்ளை அளிக்கும் உற்பத்தி நிலையம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா. இதனால் கீவ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் மின் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிக்கும் நிலை எழுந்துள்ளது.

மின்பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மக்கள் குறைவான அளவில், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மின்சாரத்தை பயன்படுத்துமாறும், மின் பயன்பாட்டை மக்கள் குறைத்தால் மின் வெட்டு நேரமும் மெல்ல குறைய தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K