புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (11:57 IST)

மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம்! – அமைச்சர் செங்கோட்டையன்!

5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வித்துறைஅ அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கிறது. மிகவும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு பொது தேர்வு வேறு பள்ளிகளில் நடைபெறும் என கூறப்பட்டது. இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த குழந்தைகளை பாதுகாப்பாக வேறு பள்ளிகளுக்கு அழைத்து செல்வது, குழந்தைகளுக்கு புதிய பள்ளியில் சூழலோடு ஒன்றி போவது உள்ளிட்டவற்றில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ”5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே நடைபெறும். எவ்வளவு குறைவான மாணவர்கள் இருந்தாலும் இதுதான் நடைமுறை. இதுகுறித்த தமிழக அரசின் அரசாணை இன்று மாலை வெளியாகும். மாணவர்களின் திறனை மேம்படுத்தவே பொது தேர்வு வைக்கப்படுகிறது. அவர்களுக்கு புரியும் வகையில் எளிதாகவே வினாத்தாள்கள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.