விறுவிறுப்பாக நடந்துவரும் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயக முறைப்படி நடைபெறும் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் இது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் ஷெரிப் பிரதமரானார். அவர் ஊழல் வழக்கில் கைதாகி தற்பொழுது சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனோடு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் பிஎம்எல்-என் கட்சிக்கும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் அல்லா-வு-அக்பர் தெஹ்ரிக் என்ற கட்சி சார்பில் தீவிரவாதிகள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போதே 150 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஓட்டுப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.