தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்..! இந்தியர்களுக்கு மாலத்தீவு அழைப்பு..!!
சுற்றுலாத்துறை மூலம் வரும் வருவாய் குறைந்துள்ள நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா வரவேண்டும் என்று இந்தியர்களை அந்த நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரி மாதத்தின் துவக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு பயணம் செய்தபோது, மாலத்தீவை சேர்ந்த துணை அமைச்சர்கள் மூன்று பேர் அவரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் உண்டானது.
அதை தொடர்ந்து மாலத்தீவை புறக்கணிக்குமாறு இந்திய பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்க, லட்சத்தீவு கவனம் ஈர்க்கத்து. அதே நேரத்தில், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 42 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மே 4 நிலவரப்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 73,785 இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 43,991ஆக குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல், மாலத்தீவுக்கு வருமாறும், தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதரவு தருமாறும் இந்தியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நம் இரு நாடுகளுக்கும் என ஒரு வரலாறு உள்ளது என்றும் எங்கள் நாடு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில், மாலத்தீவின் சுற்றுலாவில் தயவு செய்து பங்கு வகிக்குமாறு இந்தியர்களைக் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எங்கள் பொருளாதாரம், சுற்றுலாவைத்தான் நம்பி உள்ளது என்று மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல் கூறியுள்ளார்.