ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (08:37 IST)

பிரான்ஸில் மஞ்சள் ஜாக்கெட் போராட்டம்– அவசரநிலை அறிவிக்க ஆலோசனை?

பெட்ரோல் டீசல் விலையுயர்வைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இதனால் பிரான்சில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சமீப காலமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதனால் பெட்ரால் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 24 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. பிரான்ஸ் அரசு இதற்குக் காரணமாக உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனக் கூறியுள்ளது. இந்த விலையுயர்வு வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.

இந்த விலை உயர்வால் அன்றாட செலவுகள் மிகவும் அதிகமாகி உள்ளதால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இளைஞர்கள் சிலர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த மஞ்சள் ஜாக்கெட் பிரான்ஸில் உள்ள வாகன ஓட்டுநர்களின் சீருடையாகும். கார் ஓட்டுநர்கள் ஒருங்கிணைத்த இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் மக்கள் போராட்டமாக மாறியது. பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களும் இந்த போராட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

பிரான்ஸின் பல இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பிரான்ஸ் முழுவதும் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது. இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அவசர நிலையைப் பிரகடனம் செய்யலாமா என யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.