'அணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம்': பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் மிரட்டல்
'எங்கள் மீது போரை தொடுத்தால், இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்' என பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் மிரட்டும் பாணியில் கூறினார்.
காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்களை கைது செய்தனர். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் வழங்கினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்சினையில் இருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இந்தியாதான் உரி ராணுவ முகாம் தாக்குதலை நடத்தி உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. ஷோகேஸ்சில் வைப்பதற்காக ஒன்றும் நாம் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கவில்லை. அதைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்துவோம். இந்தியாவை அழிப்போம் என அவர் கூறினார்.