1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (11:16 IST)

விடாது கருப்பாய் துரத்தும் கொரோனா! – மீண்டும் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்தும் கொரோனாவுக்கு தப்பவில்லை. 16 லட்சம் மக்கள் வாழும் நியூஸிலாந்தில் கொரோனாவால் 1,156 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 22 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்தது.

அதை தொடர்ந்து கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்தை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ஊரடங்கை நீக்கி பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தார். கடந்த 25 நாட்களாக அங்கு எதுவும் புது தொற்றுகள் இல்லாமல் இருந்த நிலையில் இன்று நியூஸிலாந்தில் புதிதாக இரு தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவர்கள் இருவரும் பிரிட்டனுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.