புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (14:35 IST)

நேபாள விமான விபத்து: விமானியின் மன அழுத்தமே காரணம்

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது.
71 பயணிகளை கொண்ட அந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள தாக்காவில் இருந்து புறப்பட்டு காத்மாண்டுவை சென்றடைந்தவுடன் தீப்பற்றி விபத்துக்குள்ளானது.அந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
 
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என்று முன்னதாக கூறப்பட்டது.
 
ஆனால், விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும், விமானியறையில் புகைப்பிடித்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி, மிகுந்த மன அழுத்தத்துடனும், வேதனையுடனும் இருந்தார்; அவருடன் விமானத்தில் பயணிக்காத பெண் ஊழியர் ஒருவர் அவரின் விமானத்தின் திறமை குறித்து கேள்வி எழுப்பியதே அதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.
 
அந்த 52 வயது விமானி, 1993ஆம் ஆண்டு, மன அழுத்த பாதிப்பால் வங்கதேச விமான சேவையிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் பின் அவர் உள்ளுர் விமானங்களை செலுத்த தகுதியானவர் என மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
 
அவரின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் எந்தவித மன அழுத்த அறிகுறிகளையும் தெரிவிக்கவில்லை.
 
விமானம் பறப்பதற்கு முன்னதாக தாக்காவில் உள்ள கட்டுப்பாட்டு அறையிடம் பேசிய விமானியின் குரல், கோபத்துடன் தெரிந்ததாகவும், அது அவர் அதிகபட்ச மன அழுத்தத்தில் உள்ளதை காட்டுவதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
விமானம் விபத்துக்குள்ளாகும் தருணத்திலும் விமானி தேவையில்லாத நடவடிக்கைகளிலும், நீண்ட வாதங்களிலும் ஈடுபட்டதாக கருப்பு பெட்டி பதிவு மற்றும் உயிர்பிழைத்த பயணிகளின் கருத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
 
விமானியின் இந்த அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதற்றநிலை விமானத்தை இயக்குவதில் தவறுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடி காலக்கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விமானக் குழு சரியாக மேற்கொள்ளவில்லை என்பதும் காரணமாக அமைந்துள்ளது.
 
25 வயதான இணை விமானி, முதல் விமானியின் வயது மற்றும் அனுபவம் காரணமாக துரிதமாக செயல்படாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாத விமானக் குழு, விமானம் தனது ஓடு பாதையில் இருந்து மாறிவிட்டதை தாமதமாக உணர்ந்தது.
 
காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டுவிட்டு ஆபத்தான மலைப்பகுதியை விமானம் சென்றடைந்தது.
 
விமானக் குழு ஓடுபாதையை உணர்வதற்குள் நிலைமை மோசமாகிவிட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
விமானி தவறான நேரத்தில் விமானத்தை தரையிறக்கியதால், விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி வேலியை கடந்து தாழ்வான புல் புதருக்குள் சென்று தீப்பிடித்துக் கொண்டது.
"விமானத்தின் வெளிப்புறத்தில் பெரியளவில் தீப்பிடித்ததால், எங்களது இருக்கையின் வழியாக புகை வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து வெடிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு தீ உடனடியாக அணைக்கப்பட்டவுடன் நாங்கள் மீட்கப்பட்டோம்" என்று விபத்தில் சிக்கிய மற்றொரு பயணியான வங்கதேசத்தை சேர்ந்த 29 வயது ஆசிரியர் ஷெரின் அஹ்மத் பிபிசியிடம் கூறினார்.
 
இந்த விபத்தில் இரண்டு விமானிகள், விமானக் குழுவை சேர்ந்த இருவர், 47 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தில் 26 வருடங்களில் நடந்த மிக மோசமான விபத்து இதுவாகும்.