தமிழில் இனி தேசிய கீதம் இசைக்கப்படாது: அமைச்சரின் அறிவிப்பால் தமிழர்கள் அதிர்ச்சி
இலங்கையில் இதுவரை தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இலங்கை சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மாபெரும் வெற்றி பெற்று அதிபரானார். அது மட்டுமின்றி அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் இலங்கையின் புதிய அமைச்சரவையில் தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும், ஒரு தமிழர் கூட புதிய அமைச்சரவையில் இல்லை என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் இதுவரை இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இலங்கையின் சுதந்திரதின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது எனவும் இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் என்பவர் அறிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சரின் இந்த அறிவிப்பு அங்கு வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இலங்கை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் ஒதுக்கப்பட்டு வருவதை வைத்து அரசியல் செய்து வரும் தமிழக அரசியல்வாதிகள் இதற்கு எந்தவிதமான ரியாக்சனை தெரிவிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்