அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!
அதானி நிறுவனத்துடன் ரூ. 5900 கோடிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், கென்யா அதிபர் அதிரடியாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி மீது, அமெரிக்கா திடீரென ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது. இதையடுத்து, அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், லஞ்ச குற்றச்சாட்டின் காரணமாக அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய திட்டங்களை ரத்து செய்ததாக கென்யா அறிவித்துள்ளது. அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டம் மற்றும் மின்சார உற்பத்தித் திட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 5900 கோடி ஆகும்.
கென்யா அதிபர், இந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த 30 ஆண்டுகளுக்கான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தங்கள் அதானி நிறுவனத்தால் பெறப்பட்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அதானி நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
Edited by Siva