அமெரிக்க மக்கள் மீது கைவைத்தால் அவ்வளவுதான்..! – தலீபான்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள அமெரிக்கர்கள் மீது தலீபான்கள் கை வைக்கக்கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என பலர் வெள்ளை மாளிகை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவம் திரும்ப பெறப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள ஜோ பைடன் “அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை ஒழுங்குபடுத்த அங்கு செல்லவில்லை. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாக பயங்கரவாதிகளை ஒழிக்கவே அமெரிக்க ராணுவம் சென்றது. தற்போது அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து திரும்ப பெறுவது சரியான முடிவே. இருப்பினும் ஆப்கன் ராணுவத்திற்கு அமெரிக்கா முடிந்த உதவிகள் செய்தது. எனினும் அவர்கள் போரிடாமலேயே சரணடைந்து விட்டனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்க மக்கள் மீது கை வைத்தால் தலீபான்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.