கொரோனா வைரஸ் பீதி: 7 ஆயிரம் பேரை கப்பலில் சிறை வைத்த இத்தாலி!
இத்தாலி வந்த கப்பலில் உள்ள பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்படுவதால் 7 ஆயிரம் பயணிகளையும் கப்பலை விட்டு வெளியே விடாமல் சிறை வைத்துள்ளது இத்தாலி.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள துறைமுகத்துக்கு 7 ஆயிரம் பயணிகளை கொண்ட பிரம்மாண்டமான கோஸ்டா ஸ்மரால்டா கப்பல் வந்துள்ளது. அதில் பயணித்த 54 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய கப்பலில் உள்ள மருத்துவக்குழு அந்த பெண்ணையும், அவர் கணவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த இத்தாலி கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்காமல் கடலிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. ஒருவேளை அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்குமானால் அது மற்ற பயணிகளுக்கும் பரவியிருக்கலாம் என இத்தாலி அரசு அச்சம் கொண்டுள்ளது. கப்பல் கடல் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் 7 ஆயிரம் பயணிகள் கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாமல் சிறை வைக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரிகள் இத்தாலியில் உள்ள ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானால் மட்டுமே கப்பல் இத்தாலிக்குள் அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.