அமெரிக்காவை தாக்கிய ஐயான் சூறாவளி! க்யூபாவையும் விட்டுவைக்கல!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ஐயான் சூறாவளி தாக்கிய நிலையில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரியா மாகாணத்தில் உள்ள கேயோ கோஸ்டா கடற்கடை அருகே ஐயான் சூறாவளி புயல் கரையை கடந்தது. அமெரிக்காவில் பாதிப்புகளை ஏற்படுத்திய மோசமான சூறாவளி புயல்களில் ஒன்றாக ஐயான் கூறப்படுகிறது.
மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகமாக காற்று வீசியபடி கரை கடந்த ஐயான் சூறாவளி புயல் ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரேல் பகுதிக்கு இடையே மையம் கொண்டபோது காற்றின் வேகம் மணிக்கு 70 மைல்களாக இருந்துள்ளது. சூறாவளி தரையை கடந்தபோது மணிக்கு 241 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது.
சூறாவளியையொட்டி பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள தீவு நாடான க்யூபாவிலும் இயான் புயல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. க்யூபாவில் இருவர் உயிரிழந்த நிலையில், அதிவேக காற்றால் மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி கிடைக்காமல் அவதியுற்றனர். புளோரியாவில் இந்த புயலால் 18 லட்சம் மக்கள் மின்சார வசதி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.