ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா! கிரிக்கெட்டில் அல்ல.. காதலில்..! – வைரலாகும் புகைப்படம்!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் நடந்து வரும் மைதானத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் காதலை தெரிவிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் முதலாவதாக களம் இறங்கிய ஆஸ்திரேலியா 390 ரன்களை இலக்காக அளித்துள்ளது. தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
ஒருபுறம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இந்த அனல்பறக்கும் மோதல் நடந்து வரும் நிலையில் அதை பார்க்க வந்த ஜோடிகளிடையே காதல் மலர்ந்ததுதான் அதிசயம். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய இளைஞர் ஒருவர் தனது ஆஸ்திரேலிய காதலியுடன் மேட்ச் பார்க்க வந்துள்ளார். பார்வையாளர்கள் பகுதியில் வைத்தே தனது காதலியிடம் காதலை தெரிவித்த அவர் மோதிரத்தை நீட்டி தன்னை மணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அவரது காதலியும் அவரை ஏற்றுக் கொண்டு கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.