ஹைதி அதிபர் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்க டாக்டர் கைது!?
ஹைதி அதிபர் ஜோவனல் மொயிஸ் கொல்லப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதன் அதிபரான ஜோவனல் மொயிஸ் சில நாட்கள் முன்னதாக அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 4 பேரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் 28 பேர் கொண்டு குழு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 15 கொலம்பியர்கள் மற்றும் 2 அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோவனஸ் கொலை வழக்கில் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டதாக அமெரிக்க டாக்டர் கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜொவனசை கைது செய்யவே ஹைதி வந்ததாகவும், பின்னர் திட்டத்தை மாற்றியதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசு நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.