5 நாடுகளில் கூகுள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! நல்லவேளை இந்தியாவில் இல்லை...
செயற்கை நுண்ணறிவு துறையில் தனது முதலீடுகளை மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கூகுள் நிறுவனம் செலவுகளைக் கட்டுப்படுத்த புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு மற்றும் இழப்பீட்டுத் தொகையை கூகுள் வழங்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக கூகுள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், கூகுளின் மிக முக்கிய பிரிவுகளான டீப்மைண்ட் மற்றும் கூகுள் கிளவுட் போன்ற AI ஆராய்ச்சிப் பிரிவுகளுக்கு இந்த விருப்ப ஓய்வு திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள பொறியியல் மையத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், அங்கு பணிபுரிந்த வருடங்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 12 மாத சம்பளம் இழப்பீடாக வழங்கி ஆகஸ்ட் மாதம் முதல் ஊழியர்கள் வழிஅனுப்பப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று, மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது AI செலவினங்களை ஈடுகட்ட அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

