மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை
இந்தியாவிடம் இருந்து பிரிந்த பாகிஸ்தான் பின்னர் பாகிஸ்தான் - பங்களாதேஷ் என இரண்டாக உடைந்தது. இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனிநாடு வேண்டும் என்று பலுசிஸ்தான் மாகாண மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தானின் பலூச் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் தொடரந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், தங்களுடைய பகுதியில் பாகிஸ்தான் அரசு எந்தவொரு வளர்ச்சி திட்டங்களையும் அமல்படுத்தவில்லை என்றும் எனவே தங்களது மாகாணத்தை தனியாக பிரித்து பலூச்சிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள பேருந்துகளில் பலுசிஸ்தான் விடுதலை வாசகங்கள் தென்பட்ட நிலையில் தற்போது நியூயார்க் பேருந்துகளிலும் இந்த வாசகங்கள் உள்ளன. பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை உலகம் முழுவதும் வலுத்து வருவதால் பாகிஸ்தான் அரசு பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.