பிரிட்டனுடனான பேச்சுவார்த்தை ரத்து - பிரான்ஸ்
ஆக்கஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் ரத்து செய்திருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இடையேயான ஆக்கஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலேஸுடன் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி ரத்து செய்துவிட்டார்.
இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் ரிக்கெட்ஸும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் ஆக்கஸ் உடன்பாட்டால் பிரான்ஸ் கவலைப்படத் தேவையில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆக்கஸ் உடன்பாடு கடந்தவாரம் கையெழுத்தானது. இதன்படி நீர்மூழ்கிகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவத் தொழில்நுட்பங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படுகின்றன.
இதனால் பிரான்ஸுடன் ஆஸ்திரேலியா செய்து கொண்டிருந்த நீர்மூழ்கி உடன்பாடு ரத்து செய்யப்பட்டது. இது பிரான்ஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.