Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (23:00 IST)
புதிய கட்சி ஆரம்பித்தார் கருணா. இலங்கை தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா?
விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரும், முன்னாள் துணை அமைச்சரான கருணா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் ஆரம்பமாகியுள்ள இந்த புதிய கட்சியின் தொடக்கவிழா இலங்கையில் உள்ள மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாக தமது கட்சியின் செயல்பாடுகள் அமையும் என்று தொடக்கவிழாவின் போது கருணா பேசினார்.
கருணா ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். ஆனால் அந்த கட்சி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் வசமானதால் கருணா அம்மான் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது.
மகிந்தா அரசு கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் சில காலம் அரசியல் நடவடிக்கையில் ஆர்வமின்றி இருந்த கருணா தற்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சிக்கு இலங்கை தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்