ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் பெரியது தெய்வமாகும் என்று கூறுவதுண்டு. எனக்கு பிடல் காஸ்ட்ரோ அதற்கும் ஒருபடி மேல் என்று அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனா கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள மாரடோனா, “சுயசரிதையின் வாயிலாக உலகத்தோடு உரையாட எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது கால்பந்து விளையாட்டு. ஆனால் நான் நன்றிக் கடன் பட்டிருப்பது எனக்கு மறுவாழ்வு தந்த கியூபா மக்களுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும்தான். நான் மிகவும் துன்பப்பட்ட காலத்தில் கியூபா என்னிடம் செலுத்திய அன்பு ஈடு இணையில்லாதது.
நான் அந்த நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். என்னோடு மட்டுமல்ல மனித இனத்தின் மீது அவர்கள் காட்டும் அன்பு வியப்பளிப்பதாகும். 2005 அக்டோபர் 24 அன்று அர்ஜெண்டினா தொலைக்காட்சியில் நான் காஸ்ட்ரோவுடன் நடத்திய நேர்முகம் மறக்க முடியாத நிகழ்வு.
ஐந்து மணி நேரம் நீண்ட அந்த நேர்முக நிகழ்ச்சியில் சர்வ விசயங்கள் குறித்தும் விவாதித்தோம். நேயர்களுக்கு அது ஒரு ஐந்து நிமிட நிகழ்ச்சிபோல் அமைந்தது. டென்ஸ் நைட் என்ற நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் பீலே, பாப் இசைப் பாடகர் ரோபி வில்லியம்ஸ் முதலானோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
காஸ்ட்ரோ வந்தவுடன் நிகழ்ச்சி களைகட்டியது. விவாதிக்கப்பட்ட விசயங்களின் தன்மை, ஆழம், நகைச்சுவை கலந்த உரையாடல் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது. நிகழ்கால உலக அரசியலை முழுமையாக மதிப்பீடுசெய்த பிடல் காஸ்ட்ரோவிடம் அன்பு காட்டியதன் பேரில் எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கியூப பேஸ்பால் வீரர்களை ஏலத்திற்கு விற்றிருந்தால் கியூபா வளம் மிகுந்ததாக மாறியிருக்கும் என்று கூறிய பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு அவர்களைத் தேவையில்லை என்று மேலும் கூறினார். காரணம் செலவு அதிக மாகும். மூன்றாம் உலக நாடுகளில் குறைந்த செலவில், வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத் தேவையான விளையாட்டு வீரர்களை வார்த்தெடுத்து அனுப்புகின்றன என்றும் அவர் விளக்கினார்.
போதை மருந்துகள் தனிமனிதனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கிறது என்று கூறிய காஸ்ட்ரோ கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் நேரிடும் துயரங்களை சுட்டிக்காட்டினார். போதைமருந்து உற்பத்தியாளர்கள் அமெரிக்காவில்தான் உள்ளனர்.
உள்நாட்டுக் கலகங்களுக்கு ஊக்க மளிப்பவர்களும் அவர்கள்தான். கொலம்பிய நாட்டு விவசாயிகள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் கொக்கையின் உற்பத்தி செய்கிறார்கள். அமெரிக்கா தலையீடு உள்ளதால் தென் அமெரிக்காவில் அமைதியின்மை நிலவுகிறது என்றும் காஸ்ட்ரோ கூறினார். கியூபா பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகும்.
எனது நாடு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது, கல்வித்தரம் குறைந்துவிட்டது, உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது, சுகாதாரச் சீர்கேடு உள்ளது என்று நான் சற்று ஆவேசப்பட்டுக் கூறியபோது, பிடல் என்னை அமைதிப்படுத்தினார்.
அர்ஜெண்டினாவில் அனைத்தும் சரியாகும். முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் குணம்நிறைந்த மக்கள் நிறைந்ததாகும் நமது நாடு என்று அவர் எனக்கு நம்பிக்கையளிக்கும் வகை யில் அவரது வார்த்தைகளை நிறைவு செய்தார்.நான் நோய்வாய்ப்பட்டு அவதியுற்ற போது எனக்கு ஆதரவுக்கரம் நீட்டியது பிடல் காஸ்ட்ரோதான். சிகிச்சைபெற கியூபாவுக்கு வரவழைத்தார்.
கியூபாவில் எனக்குக் கிடைத்த அன்பும், ஆதரவும் என்னை புதிய மனிதனாக்கியது. காஸ்ட்ரோ அளித்த உற்சாகமும் தன்னம் பிக்கையும் நமது வாழ்வு முடிந்து விடவில்லை இனியும் ஆற்ற வேண்டிய கடமைகள் மீதமுள்ளன என்பதை எனக்கு உணர்த்தின.
எங்கள் இருவரிடையேயான உறவானது எளிதில் விவரிக்க இயலாத உணர்ச்சி மிகுந்ததாகும். ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் பெரியது தெய்வமாகும் என்று கூறுவதுண்டு. எனக்கு பிடல் காஸ்ட்ரோ அதற்கும் ஒருபடி மேல் ஆவார்.
அபாரமான திறமைகள் நிறையப் பெற்ற ஒருமாபெரும் விருட்சமாக அவர் விளங்கினார். எவ்வளவு பெரிய சூறைக் காற்றாலும் வீழ்த்த முடியாத அந்த தன்னம்பிக்கையின் முன்னால் உலகத்தைப் போலவே நானும் அதிசயித்து நின்றேன்.
பிடல் எனக்கு சிறந்த நண்பனாகவும், தந்தையாகவும், தோழனாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் விளங்கினார். காஸ்ட்ரோ உடல்நலம் பாதிக்கப்படா மல் இருந்தவரையில் எந்தநேரத்திலும் தொலைபேசியில் அவரை அழைக்கும் உரிமை எனக்கு இருந்தது. சிலமுக்கிய சமயங்களில் அவர் என்னை அழைப்பதுண்டு. வெனிசுலாவிற்கும், சாவேஸிற்கும் நான் ஆதரவு தெரிவித்திருந்த எனது நிலைபாட்டைப் பாராட்டி நீண்ட நேரம் பேசினார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் போது நான் நடத்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியை தொடர்ந்து கண்டு ரசித்து வந்தார் காஸ்ட்ரோ. ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து என்னைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக விளையாடும் லயனல் மெஸ்ஸிக்கு எனது பாராட்டைத் தெரிவியுங்கள் என்றும் கூறினார்.
மிகச்சிறந்த தடகள வீரரும், பேஸ்பால் ஆட்டக்காரருமான காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் உற்சாக மிகுதியின் தொனி இருந்தது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி ஊடகங்கள் மீண்டும் பொய்ப்பிரச்சாரம் நடத்திய காலகட்டம்.
பொதுமேடைகளில் அவர் வருவதில்லை என்பதைக் காரணம் காட்டி நான் இறந்து விட்டதாக ஊடகங்கள் எழுதுகின்றன என அந்தக் கடிதத்தில் காஸ்ட்ரோ குறிப்பிட்டிருந்தார்.
காஸ்ட்ரோ கையெழுத்திட்டு அனுப்பியிருந்த அந்தக் கடிதத்தை நான் ஊடகங்கள் முன்பாக வெளியிட்டபோதுதான் பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது. இறுதியில் இதோ அது சம்பவித்துள்ளது. பூவுலகின் நட்சத்திரம்.
நன்றி : தீக்கதிர்