வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2017 (23:45 IST)

உலகை வலம் வந்து கின்னஸ் சாதனை புரிந்த பெண்கள் விமானம்

ஆண்களுக்கு நிகராக பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்து ஆண்களுக்கு பெண்கள் சமம் என்று பல துறைகளில் நிரூபித்து வரும் நிலையில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்ட ஒரு விமானம் உலகை சுற்றி உலக சாதனை செய்துள்ளது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.




மார்ச்  8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது ஒரு விமானத்தை பைலட் முதல் பணியாளர்கள் வரை முழுவதும் பெண் ஊழியர்களை கொண்டு, விமானம் ஒன்றை இயக்கி உலகை வலம் வர முடிவு செய்தது. இதற்காக கடந்த 27ஆம் தேதி, டெல்லியில் இருந்து போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. இந்த விமானம் பசுபிக் பெருங்கடல் வழியாக சென்று, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக மீண்டும் டெல்லி வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பைலட்கள், ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தரைக் கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் என அனைவருமே பெண்கள் தான் இருந்தனர் என்பதுதான் இந்த சாதனையின் சிறப்பு. ஏர் இந்தியாவின் இந்த உலக சாதனைக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது.

மேலும் உலகிலேயே முதல் முறையாக பெண்களை மட்டுமே கொண்டு விமானம் ஒன்று இயங்கியது இதுதான் என்பதால் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. மேலும் இதேபோல் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி பெண்களால் நிர்வகிக்கப்படும் விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.